(எம்.மனோசித்ரா)
டீசல் தட்டுப்பாடு காரணமாக இணைய சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நாட்டின் அந்நிய செலாவணியை மேலும் சரிவடைய செய்யும். எனவே மின் உற்பத்தி நிலையங்களைப் போன்று, இணைய சேவையை வழங்கும் கோபுரங்களுக்கான (டவர்) டீசலை வழங்குவதற்கும் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இணைய சேவை தொடர்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இணைய சேவைகளை வழங்கும் கோபுரங்களுக்கு (டவர்) டீசல் வழங்கப்படாமையின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி அல்கோவுடன் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டபோது இவ்வாறானதொரு வீழ்ச்சியை நாம் எதிர்பார்க்கவில்லை. தற்போது இரு பிரதான காரணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவதாக இந்த கோபுரங்களுக்கு டீசல் வழங்கப்பட வேண்டும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமையைப் போன்று இவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
நாம் கணனி சேவைகளுக்கு முன்னுரிமையளித்தோம். இதனால் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வதிலும் சாதகமான பிரதிபலன் கிடைக்கப் பெற்றது. தற்போது இந்த சேவை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் அந்நிய செலாவணி மேலும் குறைவடையும். அவ்வாறு குறைவடைந்தால் அந்த சந்தையை மீளவும் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியது. எனவே அரசாங்கம் இது தொடர்பில் துரித நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment