பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது இன்று ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் சட்டமாகியுள்ளது - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது இன்று ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் சட்டமாகியுள்ளது - மனோ கணேசன்

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது இன்று ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் சட்டமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று (03) நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ''இன்றைய தினத்திலே நாடு முழுக்க சுயேட்சையாக இளைஞர்கள், புதிய தலைமுறையினர் சேர்ந்து ஒரு தேசிய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு எதிராக அரசாங்கம் சமூக ஊடகங்களை முடக்கி, அடக்கி, அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்து, ஊரடங்குச் சட்டத்தை போட்டு, நிற்பாட்டி இருக்கின்றது. அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் சஜித் பிரேமதாஸ தலைமையிலே நாங்கள் வந்து இந்த ஆர்ப்பாட்டத்திலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் ஊரடங்குச் சட்டத்திற்கு மயங்கி, அடங்கி ஒடுங்கி, வாயை மூடிக்கொண்டு வீட்டில் படுத்து தூங்குவோர் அல்ல. தூங்க மாட்டோம் நாங்கள். 24 மணித்தியாலங்களும் விழித்திருப்போம். தொடர்ச்சியாக போராடுவோம் நாங்கள்.

வெகு சீக்கிரத்திலே எங்களது அரசாங்கத்தை உருவாக்கி தீருவோம் நாங்கள். அது மக்கள் அரசாங்கமாக இருக்கும். இது ஒரு குடியரசு. இது சர்வதிகார நாடு அல்ல. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு அரசர் அல்ல. மன்னர் அல்ல.

இன்று இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது, ராஜபக்ஷ பாதுகாப்புச் சட்டம். அதை வைத்துக் கொண்டு அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment