"பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம், இன்று பொதுமக்களுக்கு எதிராக செயற்படுத்தப்படுகின்றது" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று (03) நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ''இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருட காலத்திலேயே இந்த மக்களை மிகவும் மோசமான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். பொருளாதாரம் அழிந்து விட்டது.
நாட்டிலே அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் வீதிகளிலே இறங்கி, வரிசைகளில் நின்று, காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்படுகின்ற ஒரு நிலை வந்திருக்கின்றது. பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டிருக்கின்றது. மின்சாரம் வெட்டப்பட்டிருப்பதால், மக்களால் வீட்டிலே வாழ முடியாமல், படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள்.
மிக மோசமான நிலை இந்த நாட்டிலே வந்திருப்பதனால், டொலருடைய பெறுமதி அதிகரித்து விட்டது. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், சாதாரண மக்களினால் வாழ முடியவில்லை.
எனவே நியாயத்தை கேட்கின்ற மக்களை அடித்து சிறைப்படுத்துகின்ற மக்களுடைய பாதுகாப்புக்கு கொண்டு வந்த, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை, மக்களை எதிர்ப்பதற்காகவும், மக்களுடைய நியாயமான கோரிக்கையை மடங்குவதற்காகவும் அரசாங்கம் இன்று இந்த அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியிருக்கின்றது" என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment