(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்தினால் விதிக்கப்படும் பல்வேறு சட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் எதிராக நாட்டு மக்களை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம். எதிர்காலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எந்தவிதமான சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்படப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை மீறி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் பங்காளி கட்சிகள் இணைந்து நேற்று (03) ஏற்பாடு செய்திருந்த அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டிருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கமானது தற்போது ஜனநாயகத்தை மீறி அதற்கு எதிராக செயற்படுகின்றமையை எதிர்த்து அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு சிவில் தரப்பினரும் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி பொது அவசரகால நிலை பிரகடனம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களுடைய ஜனநாயக உரிமையை பறித்து எடுத்திருக்கிறார்.
இதனை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகள் இணைந்து இன்று (நேற்று) எமது நாட்டில் முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே இடத்திற்கு எமது இந்த பயணத்தை தொடர முடியாது உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிசார் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி எம்மை இன்று தடுத்திருக்கிறார்.
மேலும் தற்போது நாடு தழுவிய ரீதியில் பொது அவசரகால நிலை பிரகடனம், ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு சட்டங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும், சட்டங்களுக்கு எதிராக நாட்டு மக்களுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இன்று நாம் வீதியில் இறங்கியிருக்கிறோம்.
ஜனநாயகத்தை வென்றெடுக்க இந்த ஆர்ப்பாட்டம் மூலம் நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுத்திருக்கிறோம். எதிர்காலத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எந்தவிதமான சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம் மக்களுடைய ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் போராடுவோம் என்பது உறுதி.
இதனூடாக மக்களை அடிமைப்படுத்தும் சட்டத்திற்கு தலைகுனிவதற்கு மக்களை விட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment