(இராஜதுரை ஹஷான்)
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், வலுசக்தி அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின் விநியோக தடையை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்க வலுசக்தி அமைச்சும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம் தெரிவித்துள்ளதால் இனி நீண்ட நேரம் மின் விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
நேற்றைய தினம் 6 மணித்தியாலங்கள் மின் விநியோக தடையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40000 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அதன் ஒரு தொகை மின்சார சபைக்கு விநியோகிக்கப்பட்டதால் நேற்றைய தினம் 1 மணித்தியாலமும், 40 நிமிடமும் மின் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டது.
தேசிய மின்னுற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் 12 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும், 6 மற்றும் 7ஆம் திகதிகளில் 2500 மெற்றிக் தொன் உராய்வு எண்ணெய்யும் கிடைக்கப் பெறவுள்ளதால் இனிவரும் நாட்களில் நீண்ட நேர மின் விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
மின்சாரத்தை இயலுமான அளவு சேமிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான பரிந்துரைகளை சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் முன்வைத்துள்ளோம். மின் பாவனையாளர்கள் இயலுமான அளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment