(எம்.மனோசித்ரா)
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது. இந்திய இராணுவத்தை சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழையவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய படைகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழையவில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற 'மித்ர சக்தி' என்று அழைக்கப்படும். இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இரு தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காகவே இந்த இந்திய இராணுவக்குழு இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை அப்போது வந்தடைந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளித்தார்.
மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கங்களுடன் வெளியிடப்படும் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் வீணாக பீதியடைய வேண்டாம் என்றும் ஊடக நெறிமுறைகளைப் பேணி சகல ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment