(எம்.மனோசித்ரா)
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைத்து, தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதற்கு ஒரு வார காலத்திற்குள் பதிலை வழங்குமாறும் அவ்வாறில்லை என்றால் அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வேண்டியேற்படும் என்றும் சுதந்திர கட்சி கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற் கொண்டு வெள்ளிக்கிழமை (1) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது. இதன்போதே மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், 'நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்களின் அடிப்படையில் சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதன் பின்னர் மீண்டும் கூடி பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.' என்று தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், 'இதற்கு முன்னர் பல காரணிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதோடு, 15 முக்கிய யோசனைகளையும் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
அவை தவிர சர்வ கட்சி மாநாட்டில் 22 யோசனைகளையும் முன்வைத்துள்ளோம். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் இதுவரையில் எவ்வித சாதகமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
எனவேதான் தற்போதுள்ள நிலைமைகளில் இடைக்கால அராசங்கமொன்றை அமைப்பது அத்தியாவசியமானது என்ற தீர்மானம் மத்திய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அத்தோடு எமது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறினால் நாம் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதா அல்லது எதிர்த்தரப்பிலிருந்து செயற்படுவதா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்.
சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து பதவிகளையும் கைவிடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்' என்றார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனிடம் வினவிய போது, 'நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வு காணும் வழிமுறைகளை பல சந்தர்ப்பங்களில் நாம் அரசாங்கத்திடமும், ஜனாதிபதியிடமும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம்.
எனினும் அவை சாதகமான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக விரும்பாவிட்டாலும் கூட அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட வேண்டிய நிலைக்கு சுதந்திரக் கட்சி தள்ளப்படும் என்பதை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்குள் தீர்வினை எதிர்பார்க்கின்றோம்' என்றார்.
No comments:
Post a Comment