இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு : ஆராய அவசரமாகக் கூடுகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 2, 2022

இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு : ஆராய அவசரமாகக் கூடுகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அதனால் மருத்துவ சேவை வழங்கல் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இந்நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கான திட்டங்கள் குறித்தும் ஆராய்வதற்கான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழுக்கூட்டம் இன்று கூடுகின்றது.

இக்கூட்டம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி செனல் பெர்னாண்டோவினால் அச்சங்கத்தின் மாகாண ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கிளைச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

தற்போது அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் நிலவக்கூடிய தட்டுப்பாடு தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைச்சங்கங்கள் சிலவற்றால் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முறையற்ற பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தின் விளைவாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ சேவை வழங்கலில் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் நாம் கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தோம்.

இக்காலப்பகுதியில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் விளைவாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஒளடத உற்பத்திகள், வழக்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர், அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றுக் கொண்டிருந்ததுடன் எதிர்வரக்கூடிய அச்சுறுத்தல் நிலை குறித்து விளக்கமளித்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் தொடர்ந்து நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து, அதனை உரியவாறு கையாள்வதற்கான செயற்திட்டத்தை அடையாளங்காணும் நோக்கில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழுக்கூட்டம் ஏப்ரல் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனவே அவசர கிளைச்சங்கக்கூட்டங்களை நடாத்தி உங்களுடைய வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டு நெருக்கடியைக் கையாள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆராயுமாறும், அந்தத் திட்டங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழுக்கூட்டத்தில் முன்வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment