ஜனாதிபதியும், நிர்வாகமும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்கவும் - ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

ஜனாதிபதியும், நிர்வாகமும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்கவும் - ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் ஊழலுக்கு எதிராகவும் வன்முறையற்ற முறையில் ஊழல்களுக்கு எதிராக சுதந்திரமாக அணிதிரளும் நாட்டு மக்களுடனும் ஐக்கியமாக செயற்படும் ஓர் சுயாதீன உள்நாட்டு அமைப்பாகும்.

பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் நயவஞ்சகர்களின் தன்மை மற்றும் ஊழல் நிறைந்த அதிகார பலத்தைக் கொண்ட குழுக்கள் நாட்டை சூறையாடுதல், பாரியளவில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தவறாக நிர்வகித்தமை, அரச நிர்வாக முறைமைகள் மற்றும் கட்டமைப்புகளில் வேரூன்றிப்போயுள்ள ஊழல், அரச ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை இல்லாமை நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதை TISL நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

அவசரகாலச் சட்டம், ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக ஊடகங்களின் தடைகள் ஊடாக பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டரீதியாக ஒன்றுகூடும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நசுக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது வன்மையாகக் கண்டிக்கிறது. 

கருத்துச் சுதந்திர உரிமையானது ஊழலைக் கட்டுப்படுத்த அவசியமான முக்கிய அதிகார சமநிலையாக செயற்படுகிறது. பொது மக்கள் தற்போது தங்களது கருத்துக்களை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். எமது மக்களின் ஒன்றிணைந்த எழுச்சிக் குரலானது அதிகாரத்தில் இருக்கும் பலருக்கு நம்பமுடியாத சக்தி வாய்ந்த அதிர்வலையாக மாறியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும், ஏனெனில் உயர் மட்டங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அரசியல் சார்ந்த சூழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் அதேவேளை மறைமுக நோக்கங்களை கொண்டவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும். ஏனைய உலக நாடுகளை போலவே இலங்கையிலும் கலவரத்தினை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு வருபவர்கள் மேலும் ஊழல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தி எமது தாய் நாட்டினை நாசமாக்க முடியும்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து மிகவும் மோசமான நிலைக்கு தொடர்ந்தும் இட்டுச் செல்வதை அடையாளம் கண்டுகொள்வது அவசியமாகும். 

இலங்கையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது ஊழல் நடவடிக்கைகளுக்கு சாதகமாக பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாள்வதை TISL நிறுவன செயற்பாடுகளின் அனுபங்கள் ஊடாக புரிந்துக்கொள்ளலாம். கட்டமைக்கப்பட்ட முறையில் கண்காணிப்பு நிறுவனங்களை வழுவிழக்கச் செய்தல், பொதுச் சேவைகளில் தலையிடுதல், அரச நிறுவனங்களை தவறாக பயன்படுத்தல், பொறுப்புக்கூறல் கட்டமைப்பின் முறைமையினை பலவீனப்படுத்தல், பொதுச் சொத்துக்களை பரவலாக துஷ்பிரயோகம் செய்தல், பொது நிதியினை மோசடி செய்தல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குதல் என்பன ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் செல்வங்களை சூறையாடும் ஒரு சில வழிகளாகும்.

ஒரு நாட்டின் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் நாட்டின் நலனுக்கு இன்றி அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன்களுக்காக மாற்றியமைக்கப்படுமேயானால் அது அரசினை தம்வசப்படுத்தல் எனப்படும். எவ்வாறாயினும், "ஒரு நாடாக இந்த நெருக்கடியினை வெற்றி கொள்ள ஊழலை ஒழிப்பது இன்றியமையாதது" என்ற பொதுப் புரிதலானது இலங்கைக்கு ஒரு சிறந்த தருணத்தையும் மாற்றத்திற்கான நம்பிக்கையினையும் வழங்குகிறது.

ஜனாதிபதியும், நிர்வாகமும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்குமாறு TISL நிறுவனம் கேட்டுக் கொள்கிறது. 

அதேபோல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக் கூறுபவர்களாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுமாறும் TISL நிறுவனம் குறித்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. 

குறித்த நிறுவனங்கள், அரசியலமைப்பு ரீதியில் கட்டமைக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதோடு சட்டத்திற்கு முரணாக செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் TISL நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment