கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்களா? : மக்களுக்கான தீர்வினை வழங்கும் வரை போராட்டங்கள் தொடரத்தான் போகின்றன - தயான் ஜயதிலக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்களா? : மக்களுக்கான தீர்வினை வழங்கும் வரை போராட்டங்கள் தொடரத்தான் போகின்றன - தயான் ஜயதிலக்க

(ஆர்.ராம்)

பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கையை முன்னகர்த்த முடியாது கிளர்ந்து எழுந்துள்ள மக்களின் போராட்டங்களுக்கு அடிப்படைவாத சாயத்தைப் பூசி நாட்டில் மீண்டும் கறுப்பு ஜுலையை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்களா என்று கலாநிதி. தயான் ஜயதிலக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகாலநிலையை அமுலாக்குவதன் மூலம் தீர்வினை எட்டிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுவது பொருத்தமற்றதொரு அணுகுமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. மக்கள் அன்றாடம் தமது வாழ்க்கையை கொண்டு நகர்த்த முடியாது திண்டாடி வருகின்றார்கள்.

ஆட்சியாளர்களால் அதற்கான தீர்வுகளைக் காண முடியவில்லை. இதனால் கோபமடைந்துள்ள மக்கள் கிளர்ந்து எழுந்து மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டினை முற்றுகை இட்டிருந்தனர். அதேநேரம் நாடளாவிய ரீதியிலும் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் மிரிஹான போராட்டத்தினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அடிப்படைவாதிகளின் போராட்டமாக காண்பித்துள்ளது.

இந்த நாட்டில் அடிப்படைவாதம் பற்றி பேசப்படுகின்றது என்றால் ஒரே இரவில் இயற்கை உரத்தினைப் பயன்படுத்த வேண்டும் இரசாயண உரத்தினைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் எடுத்து அறிவித்த ஆட்சியாளர்கள் அடிப்படைவாதிகள் இல்லயா என்ற கேள்வி எழுகின்றது.

ஆகவே ஆட்சியாளர்களுக்கு அடிப்படைவாதம் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. மக்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போராடுகின்றார்கள். அதற்கான தீர்வினை வழங்கும் வரையில் போராட்டங்கள் தொடரத்தான் போகின்றன. மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு அவசரகால நிலையை பிரகனடப்படுத்துவது பொருத்தமற்ற அணுகுமுறையாகும்.

அதேநேரம், 1983 இல் கறுப்பு ஜுலை கலவரங்களில் ஈடுபட்டவர்கள் பின்னர் தம்மை நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி மீது பழியைப்போடுவதற்கு முனைந்தார்கள். அதேபோன்றுதான் தற்போதும் மீண்டுமொரு கறுப்பு ஜுலைக்கு ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள் போன்றுள்ளது.

மிரிஹான போராட்டத்தின் பின்னால் ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி இருப்பதாகவும் ஏனைய போராட்டங்களை தூண்டுவதாகவும் ஆளும் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றார்கள் என்றார்.

No comments:

Post a Comment