ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்தார் பேராயர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 7, 2022

ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்தார் பேராயர்

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாட்சிகளை ஒன்று திரட்டும் செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும், குறித்த தாக்குதல்களின் பிண்ணனியில் காணப்படும் உண்மைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும், பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தியவர்கள் துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் பேராயர் ஐ.நா.வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல்ஸ் பச்லெட்டின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் திங்கட்கிழமை (7) நடைபெற்றது. இவ் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சிறுவர் சிறுமியர் 82 பேரும், சுமார் 14 நாடுகளைச் சேர்ந்த 47 பேர் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் உயிரிழந்துள்ளதோடு, 500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், குறித்தவொரு இஸ்லாம் அடிப்படைவாத குழுவினால் இது முன்னெடுக்கப்பட்டதாக அறியப்பட்டது. எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் முழுமையானதொரு அரசியல் சதி என்பது தெரியவந்துள்ளது.

நாமும், உண்மைகளை கண்டறியுமாறு வலியுறுத்தி வந்த சிவில் அமைப்புக்களும், இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக கோரி வந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

தாக்குதல்களின் பிண்ணனியிலுள்ள உண்மைகளை வெளிப்படுத்துமாறும் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் குரலெழுப்பியவர்களை துன்புறுத்தியமை மற்றும் அச்சுறுத்துவதற்கு முயற்சித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதன் பிரதிபலனாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், உண்மையில் அன்றையதினம் என்ன நடந்தது என்பதை இன்னமும் அறியாமலிருக்கின்றோம்.

இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்பட்டுள்ளன. எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் மற்றும் அதன் ஏனைய அங்கத்துவ நாடுகளிடமும் மிகவும் பொறுப்புடன் கேட்டுக் கொள்வது யாதெனில், கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாட்சிகளை ஒன்று திரட்டும் செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிண்ணனியில் காணப்படும் உண்மைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையே ஆகும் என்றார்

No comments:

Post a Comment