மக்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க மாட்டார்கள் : இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - சம்பிக்க - News View

About Us

About Us

Breaking

Monday, March 7, 2022

மக்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க மாட்டார்கள் : இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - சம்பிக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு தற்போது அடைந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு ஆட்சி மாற்றத்தினால் செய்ய முடியாது. அதனால் நாட்டின் முக்கிய சில நி்ர்வாக அதிகாரங்களை குறிப்பிட்ட சில காலத்துக்கு புத்திஜீவிகள் சபைக்கு கீழ் கொண்டுவந்து இடைக்கால அரசாங்கமாக கொண்டு செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

43 ஆவது படையணியின் கண்டி மாவட்ட சம்மேளனம் கண்டி நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதற்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது. அதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் மேலும் பல நெருக்கடி நிலைக்கு நாடு தள்ளப்படும் நிலையே இருக்கின்றது.

நாடு அடைந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு தற்போது ஆட்சி மாற்றத்தினாலும் முடியாது. அதனால் நாட்டின் முக்கிய திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் அதிகாரத்தை குறிப்பிட்ட சில காலத்துக்கு புத்திஜீவிகள் சபைக்கு ஒப்படைக்க வேண்டும்.

அதன் பிரகாரம் மத்திய வங்கி உட்பட வங்கி கட்டமைப்பு, வருமான வரி திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்கத் திணைக்களம், மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், நீர்ப்பாசன திணைக்களம் போன்ற நிறுவனங்களை புத்திஜீவிகள் சபைக்கு கீழ் கொண்டுவந்து இடைக்கால அரசாங்கமாக கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிநிலை காரணமாக மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க மாட்டார்கள். நாளுக்குநாள் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. எரிபொருட்கள் இல்லாமல் வாகனங்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தற்போதுள்ள ஒரே வழி இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதாகும். அவ்வாறான இடைக்கால அரசாங்கம் அமைத்து அதிகாரத்தை வழங்குவது அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பொறுப்பாகும்.

எனவே நாடு தற்போது வங்குராேத்து நிலைமையை அடைந்திருக்கின்றது. மக்களுக்கும் தொடர்ந்தும் இந்த நிலைமையை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. மக்களின் எதிர்ப்பு பாரிய அலையாக மாறும் அபாயம் இருக்கின்றது.

அதனை தவிர்த்துக் கொள்ள நாங்கள் அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வேலைத்திட்டங்கள் போன்று அன்னும் பலரும் நாட்டை மீட்பதற்கு வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றனர். அந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக புத்திஜீவிகள் சபைக்கு ஒப்படைக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment