அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை தாக்குதல் : முன்னாள் இராணுவ வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 7, 2022

அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை தாக்குதல் : முன்னாள் இராணுவ வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது அழுகிய முட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமரியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (7) உத்தரவிட்டது. அத்தனகல்ல நீதிவான் தரங்கா ராஜபக்ஷ இதரற்கன உத்தரவைப் பிறப்பித்தார்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரரகளான ஆனந்த பண்டார, ரன்மல் அசித்த குமார ஆகியோரையே இவ்வாறு விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கம்பஹா மாவட்டம் - கலகெடிஹேனவில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி மாலை வேளையில், கலகெடிஹேன கிளாஸ் கோ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது, அந்த மண்டபத்தின் பிரதான வாயிலுக்கு அருகே வைத்து அனுர குமார திசாநாயக்கவின் வாகனம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸாருக்கு பதிவாகியிருந்தது.

இதன்போது அனுர குமார திஸாநாயக்கவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத போதும், மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த ஒருவர் கல்வீச்சினால் கயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்து தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மண்டபத்தை நோக்கி செல்லும் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து, அக்கட்சியின் ஆதரவாளர்கள், தாக்குதல் நடாத்திய கும்பலை துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது இருவர் பிடிபட்டுள்ளதுடன் ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.

கட்சி ஆதரவாளர்களால் பிடிக்கப்பட்ட இருவரும் நிட்டம்புவ பொலிஸாரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டதாகவும், பொலிஸார் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் நிட்டம்புவ பொலிசார் கூறினர்.

எனினும் பின்னர் அவ்விருவரும் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தனர். அவர்கள் நீதிமன்றில் கூட அஜர் செய்யப்படவில்லை. மாற்றமாக நிட்டம்புவ பொலிஸார் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றுக்கு சம்பவம் தொடர்பில் பீ அறிக்கை ஒன்றினி மட்டும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த தவணையின் போது அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஆஜரான சிரேஷ்ட ச்ட்டத்தரணி லால் குமார பேலி, இது தொடர்பில் நீதிவானிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து குறித்த இருவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நீதிவான் நிட்டம்புவ பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்தே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதும் மன்றில் விடயங்களை முன் வைத்த சிரேஷ்ட் சட்டத்தரணி லால் குமார பேலி, இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் பின்னரே இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தப்பி சென்ற ஏனைய 14 சந்தேக நபர்கள் குறித்து பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே இவ்விடயங்களை ஆராய்ந்த நீதிவான், கைதான இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் ஏனையோரை கைது செய்யவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment