(எம்.மனோசித்ரா)
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கடிதங்களைப் போன்று போலியான கடிதங்களை தயாரித்து இஸ்ரேலில் தொழில் வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி இடம்பெறுகிறது. இது தொடர்பில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது முற்றுமுழுதாக மோசடி நடவடிக்கை என்றும் இதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) மங்கள ரந்தெனிகல தெரிவித்தார்.
இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மாத்திரமே முன்னெடுத்து வருகிறது. மாறாக வேறு எந்தவொரு தரப்பினரிடமும் இந்த பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
எனவே இவ்வாறான மோசடிக்கார்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், மோசடிக்காரர்களால் வழங்கப்படும் வங்கி கணக்கிலக்கங்களுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மக்களை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 24 மணித்தியாலங்களும் இயங்கும் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இலட்சனை, முகவரி உள்ளிட்டவற்றை உபயோகித்து போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேலதிக முகாமையாளர் மங்கள ரந்தெனிகல மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment