100 ரூபாவிற்கு பாண் விற்க வேண்டியநிலை ஏற்படும் : விஷம் அருந்தும் நிலைக்கு பேக்கரி உரிமையாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 7, 2022

100 ரூபாவிற்கு பாண் விற்க வேண்டியநிலை ஏற்படும் : விஷம் அருந்தும் நிலைக்கு பேக்கரி உரிமையாளர்கள்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எதிர்வரும் சில தினங்களில் ஒரு இறாத்தல் பாணொன்றை 100 ரூபாவுக்கு விற்க வேண்டியநிலை ஏற்பட்டுவதுடன், ஆயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கடன்களை செலுத்த முடியாமல் விஷம் அருந்தும் நிலைக்கு பேக்கரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கோதுமை மாவின் விலை அதிகரிப்பு, பேக்கரி உற்பத்திகளுடன் தொடர்புடைய மாஜரின், முட்டை உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றம் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ஒரு இறாத்தல் பாணொன்றை 100 ரூபாவுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இதேநிலை தொடருமாயின், ஒரு இறாத்தல் பாணொன்றை 150 ரூபாவுக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருவே‍ளை, 100 ரூபாவுக்கு பாண் கிடைக்குமானால் அவை சரியான எடையைக் கொண்டிருக்காது.

மேலும், தற்‍போதைக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பேக்கரிள் மூடப்பட்டுள்ளன. இந்நிலைமை தொடர்ந்து சென்றால் நாட்டில் 90 வீதமான பேக்கரிகள் மூடப்பட வேண்டி வரும்.

நாட்டில் டொலர் பிரச்சினை காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட்களுக்குத் தேவையான இதர பொருட்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொன்றின் பொருட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

மேலும், வங்கிகளுக்கு கடனை செலுத்துவதற்கு முடியாது பெரும் பொருளாதாரா நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதுடன், விஷம் அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment