(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டை நிர்வகிக்கவில்லை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மக்களாணையை திருடி நாட்டை முறையற்ற வகையில் நிர்வகிக்கிறார். அலங்கோல அமெரிக்கரிடமிருந்து நாட்டை பாதுகாக்கவே போராடுகிறோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ருவென்வெலிசாயவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதியமைச்சர் மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கத்தை நிர்வகிக்கிறார். நிதியமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு முரணாக போராட வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தற்போது நாட்டை நிர்வகிக்கவில்லை. மக்களாணையை திருடி முறையற்ற வகையில் பாராளுமன்றிற்கு வந்த நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டை நிர்வகிக்கிறார்.
அலங்கோல அமெரிக்கரின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிக்க இடமளிக்க முடியாது. பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி சமூக மட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நிதியமைச்சர் செயற்படுகிறார்.
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள பொருளாளதார நெருக்கடி நிலைமை குறித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை. நாட்டு மக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நிதியமைச்சர் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment