மக்களுக்காக தியாகம் செய்யும் ஜனநாயக தலைவரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது கவலையளிக்கிறது - மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 8, 2022

மக்களுக்காக தியாகம் செய்யும் ஜனநாயக தலைவரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது கவலையளிக்கிறது - மஹிந்தானந்த

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அதிக செலவு ஏற்படும் என கருதி ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தாது, நு‍கேகொடையிலுள்ள அவரது சொந்த இல்லத்தை வாசஸ்தலமாக பயன்படுத்தி வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நுகே‍கொடை இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது வருந்தத்தக்க விடயமாகும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதி மாளிகையை ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக பில்லியன் கணக்கான ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு 1.5 பில்லியன் ரூபாவை நாட்டுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார்.

மேலும், அவரின் ‍ போக்குவரத்திற்காக 25 வாகனங்கள் பயன்படுத்த முடியுமென்ற போதிலும், வெறுமனே 3 வாகனங்களை மாத்திரமே பயன்படுத்தி வருகிறார்.

தற்போது நாட்டில் எந்தளவு தூரத்திற்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு நாட்டு மக்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஜனநாயக தலைவர் மக்களுக்காக தியாகம் செய்யும் போது, சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடும் எதிர்கட்சியினர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று போராட்டம் நடத்துவது கவலையளிக்கக் கூடிய விடயமாகும்" என்றார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ‍குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment