(நா.தனுஜா)
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்து மூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சீனாவின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
அதேவேளை எமது நட்புறவு நாடு என்ற ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்தல், மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அதேபோன்று நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவையாகும்.
எனினும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, பக்கச்சார்பற்ற தன்மை, அரசியல் ரீதியான பாகுபாடற்ற தன்மை, தேர்வு செய்து இயங்காத தன்மை உள்ளிட்ட பேரவையின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது.
இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு பேரவை மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும். அதேபோன்று அந்நாட்டின் தேசிய ரீதியான வரையறைகளுக்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும்.
இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment