பொறுப்புக் கூறல், நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை பின்னடைவு : குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடிக்கிறது - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லெட் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 5, 2022

பொறுப்புக் கூறல், நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை பின்னடைவு : குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடிக்கிறது - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லெட்

இலங்கையில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச உபாய முறைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.

பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டைப் பொறுத்த வரையில் கடந்த வருடம் மிகவும் பின்னடைவு மிக்கதாகவே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தமது நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மறுக்கப்படுகின்றது. நம்பிக்கை, உண்மை மற்றும் நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை (4) நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் தனது எழுத்து மூலமான அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு உரையாற்றுகையில், இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் வன்முறைகள் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பில் உணரக்கூடிய வகையிலான செயற்பாடுகள் இடம்பெறாத நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கையில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உபாய முறைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை, மறுசீரமைப்புக்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை என்பனவற்றை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். எப்படியிருப்பினும் இலங்கையில் சுயாதீன நீதித்துறையை பலப்படுத்த வேண்டும்.

இராணுவத்தில் தங்கியிருத்தல் தவிர்க்கப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலரை விடுவித்துள்ளமை அந்தச் சட்டத்தை திருத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படுகின்ற சில அடிப்படை விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் ஆராய்வது மிக அவசியமாகும்.

இலங்கையின் பாதுகாப்புத்துறை தொடர்பான மறுதீரமைப்புக்கள் மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது.

பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டை பொறுத்த வரையில் கடந்த வருடம் மிகவும் பின்னடைவு மிக்கதாகவே காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தமது நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மறுக்கப்படுகின்றது. நம்பிக்கை, உண்மை மற்றும் நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இராணுவ அதிகாரிகளின் கைகளில் சிவில் நிர்வாகப் பதவிகள் குவிந்து கிடப்பது கண்டு நான் ஆழ்ந்த கவலையுடன் இருக்கின்றேன். அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான, ஆழமான, நீதிஸ்தாபன மற்றும் பாதுகாப்புத்துறை சீர் திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வுப் பிரிவினரால் துன்புறுத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதுமாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment