மக்கள் கிளர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள அரச பங்காளிகள் நடத்தும் நாடகமே அமைச்சரவை வெளியேற்றம் - அனுரகுமார திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, March 5, 2022

மக்கள் கிளர்ச்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள அரச பங்காளிகள் நடத்தும் நாடகமே அமைச்சரவை வெளியேற்றம் - அனுரகுமார திசாநாயக்க

(ஆர்.யசி)

பொருளாதார ரீதியில் நாடு வீழ்ச்சிகண்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியொன்று உருவாகும் நிலைமையில் அதற்கு முகம்கொடுக்க முடியாது நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரச பங்காளிகள் நடத்தும் நாடகமே அமைச்சரவையில் இருந்து வெளியேற்றமும் அமைச்சரவை மாற்றங்களும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தை வினவிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் லீ குவான் யூ, மகாதீர் மொஹமட் போன்று ஒரு தலைவரை கொண்டுவருவதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவே அந்த தலைவர் எனவும் கூறி இவர்களே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினார்கள்.

இன்று அவரின் தலைமைத்துவம் பொருத்தமற்றது எனக்கூறி அமைச்சுப் பதவிகளை விடுத்தது தனித்து நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது அரசாங்கத்தில் இடம்பெறும் உண்மையான முரண்பாடுகள் அல்ல. மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் நாசகார வேலைகளையே அரசாங்கம் செய்து வருகின்றது.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலையொன்று காணப்படுகின்றது. ஒருபுறம் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம் என்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையொன்று காணப்படுகின்றது. நாளாந்தம் ஏழரை மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டுள்ளது. உணவுத் தட்டுப்பாட்டை நோக்கி நாடு நகர்கின்றது. உரப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது அரசாங்கம் திண்டாடிக் கொண்டுள்ளது. இது நேரடியாக மக்களை தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இவ்வாறாக பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, கூடவே அரசியல் நெருக்கடியும் ஏற்படும். மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் சூழல் உருவாகும். இதனை அரசாங்கத்தினால் சமாளிக்க முடியாத நிலையில் ஏதேனும் சூழ்ச்சிகளை கையாண்டு மக்களை ஏமாற்ற வேண்டியும். அதனையே அரசாங்கம் இப்போது செய்துகொண்டுள்ளது.

மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானம் எடுக்க முன்னர் அரசாங்கத்தில் ஒரு சிலரை வைத்து நாடமாடிக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் இப்போது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடப்போவதில்லை. நாளாந்தம் மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கத்தான் போகின்றது.

ஆகவே மாறி மாற்றி ஆட்சியில் இருந்துகொண்டு பிரதான கட்சிகள் இரண்டுமே நாட்டை நாசமாக்கியுள்ளனர். இனியும் இவர்களால் நாட்டை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியாது. விக்ரமசிங்க, பிரேமதாச தரப்பினாலும் சரி, ராஜபக்ஷவினராலும் இனியும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது.

எனவே மக்கள் ஆட்சி ஒன்றினை உருவாக்க வேண்டும். தனி நபர்களை நம்பி இனியும் நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது. சகலரும் இணைந்து ஒன்றாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான ஆட்சியை உருவாக்க வேண்டும். அதனையே நாம் வலியுறுத்தி நிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment