பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்கள் சர்வதேச அழுத்தத்தைக் கையாள்வதற்கான முயற்சியே - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்கள் சர்வதேச அழுத்தத்தைக் கையாள்வதற்கான முயற்சியே - மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

(நா.தனுஜா)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பெருமளவிற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைக் கையாள்வதற்கான முயற்சியாகக் காணப்படுகின்றதேயன்றி, அவை நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் மீறல்களுக்கான தீர்வை வழங்கும் நோக்கிலான செயற்திறன்மிக்க நடவடிக்கையாகத் தென்படவில்லை என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விசனம் வெளியிட்டுள்ளது.

அத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழித்து, அதற்குப் பதிலாகப் புதியதொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தியுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக ஏற்றுக் கொள்ளத்தக்க சட்டமொன்று உருவாக்கப்படும் வரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையினால் கடந்த 24 ஆம் திகதி அங்கீகாரமளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தற்போது மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படைத் திருத்தங்களாகக் காணப்படுவதுடன் அவை யதார்த்தத்தில் இச்சட்டத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் கையாள்வதற்குப் போதுமானவையல்ல என்று நாம் கருதுகின்றோம்.

இச்சட்டத்தில் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட வேண்டிய கூறுகள் என்று சட்ட வல்லுனர்களாலும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களாலும் உயர் நீதிமன்றத்தினாலும் சுட்டிக்காட்டப்பட்ட சரத்துக்கள் தொடர்பில் இம்முன்மொழிவுகளில் அவதானம் செலுத்தப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பெருமளவிற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைக் கையாள்வதற்கான முயற்சியாகக் காணப்படுகின்றதேயன்றி, அவை நடைமுறைப்பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் மீறல்களுக்கான தீர்வை வழங்கும் நோக்கிலான செயற்திறன்மிக்க நடவடிக்கையாகத் தென்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான எமது கரிசனைகளை மீளவலியுறுத்தும் அதேவேளை அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழித்து, அதற்குப் பதிலாகப் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்தோடு ஏற்றுக் கொள்ளத்தக்க சட்டமொன்று உருவாக்கப்படும் வரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்படும் முறைகளால் உருவாகக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும்போது, அதனைப் பதிவு செய்வதில் எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. கரிசனைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேபோன்று இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரை 72 மணித்தியாலயங்களின் பின்னர் நீதவான் முன்நிலையில் ஆஜர்ப்படுத்துவது குறித்து எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

மேலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபரை விசாரணைகளுக்கு உட்படுத்தும்போது உரியவாறான நீதிமன்ற மேற்பார்வை காணப்படாமை குறித்து முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை.

சந்தேகநபர்களை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லல் உள்ளடங்கலாக விசாரணை அதிகாரிகளுக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பொறுத்தமட்டில் 'குற்றம்' என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை இல்லாத இடங்களிலும் அச்சட்டத்தை பிரயோகிப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் இதற்கான தீர்வு வழங்கப்படவில்லை. மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி ஒருவரை அச்சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது அச்சந்தர்ப்பத்தில் அதற்கான காரணம் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும் இது நாட்டின் அரசியலமைப்பின் 13(1) ஆவது சரத்தையும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 9(2) ஆவது சரத்தையும் மீறும் வகையில் அமைந்துள்ளது.

அதேவேளை இச்சட்டத்தின் கீழ் விரிவான வழிகாட்டல்களை உருவாக்கும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளமையானது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவாறான வழிகாட்டல்களின் உருவாக்கத்திற்குக் காரணமாகியுள்ளது.

எனினும் இவை தொடர்பிலும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment