(எம்.ஆர்.எம்.வசீம்)
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை ஜனநாயக ரீதியில் செயலணியில் முன்வைக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூர்ஹாமித் தெரிவித்தார்.
மார்க்க விவகாரங்களுக்கான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் கொழும்பு சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி, நாட்டின் நிறைவேற்று அதிகாரியான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதொன்றாகும். அதற்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன.
அந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் தொடர்பாக பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் இது தொடர்பாக பல்வேறு கருத்து உடையவர்கள் இருப்பார்கள். அவர்களும் இந்த செயலணியில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அத்துடன் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல யாருக்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமானால் ஜனநாயக ரீதியில் அந்த செயலணிக்கு சென்று அவர்களுக்கு தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது.
முஸ்லிம் மக்களிடமும் நாங்கள் வேண்டிக்கொள்வது, உங்களுக்கு ஏதாவது இந்த செயலணிக்கு சென்று கருத்து சொல்ல வேண்டுமானால் அது அவர்களின் உரிமை. அதனை அவர்கள் தாராளமாக முன்வைக்கலாம்.
மேலும் இந்த செயலணி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதனை தொகுத்து ஜனாதிபதிக்கே கையளிக்க இருக்கின்றது. அதனால் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பவர்களும் அதனை செயலணிக்கு முன்னால் தெரிவிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அத்துடன் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் இஸ்லாம் பாடப்புத்தங்களில் ஒருசில விடயங்களை காலத்துக்கு ஏற்றவகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து, அந்த புத்தகங்கள் மீள பெறப்பட்டிருக்கின்றன.
அதில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். அதற்கு பொருத்தமான திருத்தங்களுடன் பிள்ளைகளுக்கு குறித்த புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment