இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று ஐந்தாவது அலையை ஏற்படுத்தலாம் : பூஸ்டர் தடுப்பூசி பெறுவது அத்தியாவசியம் - எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்று ஐந்தாவது அலையை ஏற்படுத்தலாம் : பூஸ்டர் தடுப்பூசி பெறுவது அத்தியாவசியம் - எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நாளொன்றுக்கு 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதன் மூலம் சமூகத்திலும் தொற்றாளர்கள் காணப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒமிக்ரோன் பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தா விட்டால், அதன் மூலம் ஐந்தாவது அலை ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிறு அல்லது நடுத்தரளவிலான அறிகுறிகளே காண்பிக்கப்படுகின்றன. எனினும் இது மிகவும் வேகமாக பரவக்கூடியதாகும். இவ்வாறு வேகமாக பரவும் போது ஒமிக்ரோன் வைரஸிலிருந்து உப திரிபுக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். அதன் விளைவுகள் பாரதூரமானதாகக் காணப்படலாம் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒமிக்ரோன் தொற்றானது உலகலாவிய ரீதியில் அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆம் திகதி மாத்திரம் உலகலாவிய ரீதியில் சுமார் 14 இலட்சம் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவற்றில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கூற முடியாது. காரணம் பி.சி.ஆர். பரிசோதனைகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை இனங்காண முடியாது. அதற்கு கொவிட் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியினை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரையில் நாளொன்றுக்கு இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான தொற்றாளர்கள் கடந்த சில தினங்களாக இனங்காணப்படுகின்றனர்.

அமெரிக்காவில் இதற்கு முன்னர் நாளொன்று அதிகூடிய எண்ணிக்கையாக 5 இலட்சம் தொற்றாளர்களும், பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 45000 தொற்றாளர்களும், கனடாவில் 27 000 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். எனினும் அண்மைக் காலமாக இதனை விட அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் பண்டிகை காலத்துடன் இலங்கையின் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. சுகாதார விதிமுறைகள் நாட்டில் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இலங்கையில் ஐந்தாவது அலையொன்று ஏற்படுமாயின் அதற்கு பிரதான காரணியாக ஒமிக்ரோன் காணப்படும்.

ஒரே நாளில் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், சமூகத்தில் இதனை விட அதிக தொற்றாளர்கள் இருக்கக் கூடும். எனவே ஒமிக்ரோன் தொற்றால் ஐந்தாவது அலை ஏற்படுமாயின் அது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிறு அல்லது நடுத்தரளவிலான அறிகுறிகளே காண்பிக்கப்படுகின்றன. எனினும்கூட இது மிகவும் வேகமாக பரவக்கூடியதாகும். இவ்வாறு வேகமாக பரவும் போது ஒமிக்ரோன் வைரஸிலிருந்து உப திரிபுக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். அதன் விளைவுகள் பாரதூரமானதாகக் காணப்படலாம்.

எனவே ஐந்தாவது அலையை தடுக்க வேண்டுமெனில் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது அத்தியாவசியமாகும். எனினும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்களின் ஆர்வம் மந்தமாகவே காணப்படுகிறது. இதுவரையில் சுமார் 4 மில்லியன் பேருக்கு மாத்திரமே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரோன் திரிபுகள் கட்டுப்படுமா என்ற கேள்விக்குறி காணப்படுகின்ற போதிலும், செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். எனவேதான் செயலூக்கி தடுப்பூசியைப் பெறுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

எந்த திரிபானாலும் அது பரவும் வழிமுறை ஒன்றாகவே காணப்படுகிறது. எனவே சுகாதார விதிமுறைகள் மிகவும் இறுக்கமாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இரு வாரங்களுக்கு ஒரு முறை சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அவை மக்களால் பின்பற்றப்படுவதில்லை. இவ்விடயங்களில் அவதானமாக இருந்தால் மாத்திரமே ஒமிக்ரோனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment