இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி பகல்/இரவு ஆட்டமாக கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரினை முழுமையாக கைப்பற்றி 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறும் நோக்குடன் இங்கை இன்று களமிறங்குகின்றது.
போனஸ் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும். இதனால் அந்த எட்டு அணிகளுக்குள் இடம்பிடிப்பதே இலங்கையின் இலக்காகும்.
2023 உலகக் கிண்ண சூப்பர் லீக்கிற்கு முன்னதாக, இலங்கை 15 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியையும் சேர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை விளையாட இன்னும் 6 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
தற்சமயம் இலங்கை 42 போனஸ் புள்ளிகளுடன் அட்டவணையில் ஆறாவது இடத்தில் உள்ளது. சிம்பாப்வேவுடனான மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், 30 போனஸ் புள்ளிகளைப் பெறுவதுடன், மொத்த போனஸ் புள்ளிகளின் எண்ணிக்கை 42 இல் இருந்து 72 ஆக உயரும்.
இங்கிலாந்து 95 போனஸ் புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா முறையே 80 மற்றும் 60 போனஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதன்படி தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி மேற்படி இலக்கை அடையும் பட்சத்தில் சுப்பர் லீக் போனஸ் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியாவை நான்காவது இடத்திற்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
இதேவேளை கிரேக் இர்வின் தலைமையிலான சிம்பாப்வே அணியில் பல அனுபவ வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டி இர்வினுக்கு 100 ஆவது ஒருநாள் போட்டியாகும்.
அவர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான ரெஜின் சகப்வா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா மற்றும் வெலிங்டன் மசகட்சா ஆகியோர் அடங்குவர். எனினும் சமீப காலமாக சிம்பாப்வே அணியால் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற முடியவில்லை.
கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆறு ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
2020 இல் கொவிட் வைரஸ் பரவியதைத் தொடர்ந்து கிரிக்கெட் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து சிம்பாப்வே ஒன்பது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளது,
ஆனால் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்திற்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இந்த நிலையில், சர்வதேச அணிகள் தரவரிசையில் சிம்பாப்வே அணி 14 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் தங்களது வரலாற்றில் 57 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது, இதில் இலங்கை 44 முறையும், ஜிம்பாப்வே 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment