கொழும்பு, கண்டியை இணைக்கும் மீரிகமை, குருணாகல் பகுதி திறந்து வைக்கப்பட்டது : ”மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” ஜனாதிபதி : “செயல்களினூடாகவே விமர்சனங்களுக்கு பதிலளிக்கப்படும்” பிரதமர் : கட்டணங்களும் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 15, 2022

கொழும்பு, கண்டியை இணைக்கும் மீரிகமை, குருணாகல் பகுதி திறந்து வைக்கப்பட்டது : ”மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” ஜனாதிபதி : “செயல்களினூடாகவே விமர்சனங்களுக்கு பதிலளிக்கப்படும்” பிரதமர் : கட்டணங்களும் வெளியீடு

கொழும்பு - கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமை முதல் குருணாகல் வரையிலான பகுதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால், நேற்று (15) பிற்பகல் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

40.91 கிலோ மீற்றர்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமான “அத்துகல்புர நுழைவு”, மீரிகமை, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய 05 இடமாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்தப் பகுதியை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துக்கு மத்தியில், மீரிகமை நுழைவாயிலின் நினைவுக் கல்லை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் திரை நீக்கம் செய்து வைத்தனர். 
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாவை வெட்டி வீதியைத் திறந்து வைத்ததுடன், அதன் பின்னர் பிரதான பொதுக்கூட்டம் நடைபெறும் குருணாகல் இடமாற்றத்துக்குப் புறப்பட்டனர்.

மீரிகமையில் இருந்து குருணாகல் வரையிலான இடமாற்ற வீதிக்கு அருகில் கூடியிருந்த மக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அமோக வரவேற்பளித்தனர்.

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையானது, மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. முதற்கட்டமான கடவத்தை முதல் மீரிகமை வரையிலான தூரம் 37.9 கிலோ மீற்றர் ஆகும். மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான தூரம் 32.5 கிலோ மீற்றர் தூரமாகும். கொழும்பில் இருந்து கலகெதர வரையான முழு வீதியை, 2024ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் வகையில், மீரிகமை முதல் குருணாகல் வரையிலான பகுதியின் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் (25%), தூண்களின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதில் வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்படும் சத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
நண்பகல் வரை பயணிக்க இலவசம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமை முதல் குருநாகல் வரையிலான பகுதி நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணி வரை அங்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதன் பின்னர் அறவிடப்படும் கட்டணம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலகுரக வாகனம் ஏதேனும் இரண்டு பரிமாற்றங்களுக்கு இடையில் சென்றால் அதற்கு ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனரக வாகனம் சென்றால் ரூ.150 செலுத்த வேண்டும்.

மேலும் அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமையில் இருந்து குருணாகல் நோக்கி பயணிக்கும் இலகுரக வாகனம் ஒன்றுக்கு ரூ. 250 செலுத்த வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் ஏதேனும் இரண்டு பரிமாற்றங்களுக்கு இடையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் ரூ. 150 உம், மீரிகமையிலிருந்து குருணாகல் வரை பயணிப்பவர்கள் முறையே ரூ. 350, ரூ. 550 ரூபா செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி உரை
இந்நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதாகத் தெரிவித்தார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் என்ற வகையில், எப்போதும் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, தான் ஆட்சிக்கு வந்த பின்னர் வயல்களில் கால் பதித்து விவசாயத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மறக்க முடியாது என்றும் அவர்களைத் தொடர்ந்து பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் வலியுறுத்தினார்.

95 ரூபாய்க்கேனும் நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளைப் பலப்படுத்துமாறு விவசாயத்துறை அமைச்சருக்குத் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஊடகங்களுடன் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். அபிவிருத்தியின் பங்காளியாக இணைந்திருக்குமாறு, ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

பொய்ப் பிரசாரங்களினால் மனம் தளர்ந்துவிடாமல், நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்துச் செயற்பட வருமாறு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ
இன்றைய உலகம் மற்றும் சமூகம் என்பன மிகவும் வேகமானவை. எனவே, காலத்தை உயர்ந்தபட்சம் உபயோகப்படுத்திக் கொள்ள சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும் என்றும் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உலகில் அபிவிருத்தி அடைந்ததாகக் கருதப்படும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு, முறையான போக்குவரத்து பிரதான காரணியாக மாறியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளின் அளவுக்கு விமர்சிக்கப்படும் திட்டம் ஒன்று இந்த நாட்டில் இல்லை எனலாம். விமர்சித்துக் கொண்டே அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் என்றும், மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாடு மூடப்பட்டிருந்த போதிலும், மனிதாபிமானமிக்க தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி, மக்களின் நலன் கருதி எவ்வாறு தீர்மானங்களை எடுத்தார் என்பதை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இங்கு நினைவு கூர்ந்தார். 

எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி எதிர்பார்க்கும் இலக்குகளைக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிக் கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என்றும், அமைச்சர் உறுதியளித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜனாதிபதியும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வும், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment