தைப் பொங்கல் பண்டிகை காலத்தில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், தைப் பொங்கல் பண்டிகைக் காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் நடமாடுவது அவதானிக்கப்படுவதனால் அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது சுகாதார பாதுகாப்புடன் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுள்ளார்.
பண்டிகை காலத்தினை முன்னிட்டு பொருள் கொள்வனவிற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லுபவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் கேட்டுள்ளார்.
தற்போது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவதை காண முடிகின்றது. இவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் சன நெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு செல்வதை இயன்றளவு தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment