அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாவிடின் எமக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அரசாங்கத்தை எதிர்த்து நாம் செயற்படுகின்ற எதிர்வினையினால்தான் சிங்கள குடியேற்றம் தொடர்கின்றது. எனவேதான் இவ்வாறான பிரச்சினைகள் தீர்வு காண வேண்டுமாயின் சிங்கள மக்களிடமும் அரசாங்கத்திடமும் எமது பிரச்சினைகளை எடுத்துகூற வேண்டும். அவ்வாறு இல்லாது இந்தியா ஐக்கிய நாடுகள் சபையினை நாடுவதனால் எதனையும் தீர்க்க முடியாது என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) மாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் உள்ள முஸ்லீம் கட்சிகள் உண்மைக்கு மாறாக செயற்பட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கின்ற காரணத்தினால் 2005 ஆம் ஆண்டு எமது கட்சியை ஆரம்பித்தோம். இவ்வாறு ஆரம்பித்த பின்னர் மிக நேர்மையாக எமது மக்களுக்கு அரசியலை சொல்லிக் கொடுத்து அரசியல் விழிப்பூட்டல்களை மேற்கொண்ட கட்சியாக இருந்து கொண்டு இருக்கின்றோம்.
நாங்கள் யாரையும் ஏமாற்றவுமில்லை. எவரையும் ஏமாற்ற அனுமதிப்பதுமில்லை. அந்த வகையில் சில கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்ற காலகட்டத்தில் இளைஞர்கள் ஒத்துழைப்பார்களாயின் எதிர்கால நேர்மையான அரசியலை மேற்கொள்ள முடியும். சில இளைஞர்கள் ஒரு கட்சியில் இணைந்துவிட்டால் உடனடியாக நன்மைகள் கிடைக்கும் என எண்ணுகின்றார்கள். ஆனால் அவ்வாறு முடியாது. எனவே கட்சி ஒன்றில் இணைந்து சில தேர்தலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றியீட்டி எமது சமூகத்திற்கு சேவை செய்ய முடியும்.
கடந்த 20 வருடங்களாக செயற்படுகின்ற கட்சிகள் இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. எனவே இளைஞர்களே எமது கட்சியில் இணைந்து செயற்பட முன்வாருங்கள். சில கட்சிகள் கட்சியின் வால்களாக இளைஞர்களை பயன்படுத்தி வருகின்றனர். இக்கட்சிகள் அரசியல் தாகம் உள்ள இளைஞர்களுக்கு இடம்கொடுப்பதில்லை.
அதே போன்று இளைஞர்களை சில கட்சிகள் அடிமைகளாக பயன்படுத்தி வருகின்றார்களே தவிர அவர்களை தலைவர்களாக உருவாக்குவதில்லை என்ற குறைபாடும் தொடர்கதையாகும். ஆனால் நாங்கள் இளைஞர்களை அரவணைத்து அவர்களுக்கு பதவிகளை வழங்கி எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதிகளாக உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வகையில் இன மத பேதங்களுக்கு அப்பால் எமது கட்சியில் இணையுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
எமது கட்சியின் நிலைப்பாடானது வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். அதேவேளை சிங்கள மக்களையும் நாங்கள் ஓரங்கட்டிவிட முடியாது. முஸ்லீம் மக்கள் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.
ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் இனவாத முறையில் செயற்பட்டும் பின்னர் தமிழ் முஸ்லீம் உறவுகளை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றன. இதற்குதான் படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன்கோவில் உதாரணமாக கூறுவார்கள். அவர்கள் ஒற்றுமையை இந்த சமூகத்தில் வலியுறுத்தி பின்னர் குழப்புவார்கள். இதில் தமிழர் முதலமைச்சரா அல்லது முஸ்லீம் முதலமைச்சரா என தமிழ் பேசும் மக்களிடையே உசுப்பேத்தி அரசியல் செய்வதையே நாம் காண்கின்றோம். எனவே இவ்வாறான கட்சிகளை மக்கள் நிராகரித்து உண்மைகளை பேசுகின்ற கட்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் மாகாண சபை முறைமை இந்தியாவின் தன்னலத்திற்காக கொண்டுவரப்பட்டதே அன்றி முஸ்லீம் மக்களின் எதுவித கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. 13 ஆவது அரசியல் சீர்திருத்தமானது இந்நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய இனப் பிரச்சினைக்காக இந்தியாவினால் திணிக்கப்பட்ட ஒன்றாகும்.
அந்த வகையில் தமிழ் கட்சிகள் சில இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள். இந்த கடிதம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கறையுடன் செயற்படுவதை காண்கின்றோம். இதற்கு எதிராக எமது கட்சி கண்டனங்களை தெரிவித்திருந்தது. முஸ்லீம்கள் தனியான இனம் என்பதை அடையாளப்படுத்தும் வரை வடக்கு கிழக்கு மாகாணம் இணைவதை அனுமதிக்க முடியாது.
மேற்படி கடிதமானது இந்தியாவிற்கு அனுப்பப்படுமா அல்லது அவர்களுக்கு கிடைக்குமா என்பது வேறு பிரச்சினை. இக்கடித செயற்பாட்டினை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்கும் தங்களது வாக்கு வங்கிகள் சரியாமல் பாதுகாப்பதற்குமே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.
இந்த கடித விடயத்தில் தற்போது தமிழ் கட்சிகளிடையே ஆலோசனைகளை பின்பற்றாமையினால் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஒன்றாக இருந்து கடிதம் எழுதிவிட்டு தற்போது ஆளுக்கால் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்தியாவினால் எமது நாட்டு பிரச்சினையினை தீர்ப்பதற்குரிய சாத்தியங்கள் இருப்பதாக எமக்கு தெரியவில்லை.
எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு நமது நாட்டில்தான் தீர்வு காண வேண்டும். முதலில் வடக்கு கிழக்கில் வாழக்கின்ற இரு இனங்களும் ஒற்றுமைப்பட வேண்டும். இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதோ அல்லது ஐக்கிய நாடுகளுக்கோ கடிதம் அனுப்புவதற்கு முன்னர் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கல்முனையில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றாக வாழ முடியாது வேறுவேறு பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வடகிழக்கு இணையுங்கள் என கூறுவது கீழ்த்தனமான அரசியல் செயற்பாடு ஆகும். ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள இவ்விரு இனங்களும் பேச வேண்டும். பிரச்சினைகளை அடையாம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாவிடின் எமக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அரசாங்கத்தின் அணுசரனை எமக்கு வேண்டும். சிங்கள குடியேற்றங்கள் உருவாவதும் இவ்வாறுதான். அரசாங்கத்தை எதிர்த்து நாம் செயற்படுகின்ற எதிர்வினையினால்தான் இவ்வாறான குடியேற்றம் தொடர்கின்றது.
அரசாங்கமும் மக்கள் பலத்தை கூட்டி அவர்களின் பலத்தை காட்ட முயல்கின்றனர். எனவேதான் இவ்வாறான பிரச்சினைகள் தீர்வு காண வேண்டுமாயின் சிங்கள மக்களிடமும் அரசாங்கத்திடமும் பிரச்சினைகளை எடுத்து கூற வேண்டும். அவ்வாறு இல்லாது இந்தியா ஐக்கிய நாடுகள் சபையினை நாடுவதனால் எதனை தீர்க்க முடியாது என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என கூறினார்.
No comments:
Post a Comment