ரணிலை நீக்கி மஹிந்தவை பிரதமராக நியமித்த தீர்மானம், இப்போதும் சரியே என்பதில் உறுதியாக உள்ளேன் - மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

ரணிலை நீக்கி மஹிந்தவை பிரதமராக நியமித்த தீர்மானம், இப்போதும் சரியே என்பதில் உறுதியாக உள்ளேன் - மைத்திரி

(ஆர்.யசி)

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, அந்த சித்தார்ந்தத்திற்கு அமையவே நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தேன். அன்றைய சூழ்நிலையில் நான் எடுத்த தீர்மானம் சரியானது என்பதில் இப்போதும் உறுதியாக உள்ளேன் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த தீர்மானங்கள் மற்றும் ராஜபக்ஷவினருடன் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் தொடர்புகள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே இவற்றை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதானது, கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நான் எடுத்த தீர்மானம் சரி என்பதே எனது நிலைப்பாடாகும். அந்த தீர்மானத்தில் எந்த தவறையும் நான் காணவில்லை.

அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை மற்றும் எனது கொள்கையுடன் அவர்கள் உடன்படாத காரணத்தினால்தான் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சரவையையும் நீக்கினேன். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துக் கொண்டேன். இது எனது அரசியல் ரீதியிலான தீர்மானமாகும்.

அரசியல் தீர்மானம் என்பது வேறு, சட்டம் என்பது வேறு. அப்போது வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நான் திருப்தியடையவில்லை.

அன்றைய சூழ்நிலையில் எவ்வாறு சர்வதேச அழுத்தங்கள் எழுந்தன, தூதரகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும்.

உலகில் பலமான நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்ற கலரியில் இருந்து கைதட்டி மகிழ்ந்தனர் என்பதெல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. எவ்வாறு இந்த நீதிமன்ற தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது குறித்து எனக்கு தெரியாது.

நான் எடுத்த தீர்மானமும் எனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல, உயரிய சட்ட வல்லுனர்கள் மூலமாக எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இது பிழைத்தது என்பதில் கேள்வி உள்ளது. எவ்வாறு இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க நான் எடுத்த தீர்மானம் சரியானது என்பதே இன்றும் எனது நிலைப்பாடாகும்.

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை, இது நான் எடுத்த அரசியல் தீர்மானம் மட்டுமேயாகும். இன்றைய எதிரி நாளைய நண்பர் என்பதே அரசியல் நியதி.

இலங்கையில் நிரந்தரமான அரசியல் எதிரியும் இருந்ததில்லை, நிரந்தர நண்பரும் இருந்ததில்லை. அதேபோல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாட்டை மீட்டெடுக்க தகுதியான அணியொன்றை உருவாக்கி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது முயற்சியாகும். பதவிகள் குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல.

இன்று நாடே எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மக்களை மோசமாக பாதித்துக் கொண்டுள்ள நிலையில் தற்போது எவ்வாறு நாம் மீழ்வது என்பதே மக்களின் மனநிலையாகும். மாறாக யார் அடுத்த ஜனாதிபதி, யார் பிரதமர் என நினைக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்றார்.

No comments:

Post a Comment