ஒரு தரப்பினர் பகல் கனவு காண்கிறார்கள், எக்காரணிகளுக்காகவும் மின் விநியோகம் துண்டிக்கப்படாது - காமினி லொக்குகே - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

ஒரு தரப்பினர் பகல் கனவு காண்கிறார்கள், எக்காரணிகளுக்காகவும் மின் விநியோகம் துண்டிக்கப்படாது - காமினி லொக்குகே

(இராஜதுரை ஹஷான்)

நாடு தழுவிய ரீதியில் அடுத்த மாதம் முதல் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என ஒரு தரப்பினர் பகல் கனவு காண்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் மின் விநியோகம் துண்டிக்கப்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதுடன் நுரைச்சோலை மின் நிலையத்தின் ஊடாக தற்போது 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை தொடர்வதால் நீர் மின் உற்பத்தி எதிர்வரும் நாட்களில் பாதிக்கப்படலாம். மின்னுற்பத்தி துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை மின்சார சபையின் அனைத்து சேவையாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள்.

இம்மாதம் முதல் நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என ஒரு தரப்பினர் பகல் கனவு கண்டு பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஒரு சில ஊடகங்கள் மின்சாரம் நெருக்கடி என இல்லாத ஒரு பிரச்சினையை இருப்பதை போல் காண்பித்துக் கொள்கிறது.

நாட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் விநியோக கட்டமைப்பினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதி பலமுறை உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எக்காரணிகளுக்காகவும் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

மறு அறிவித்தல் விடுக்கும் வரை திட்டமிட்ட மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொது ப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் விநியோக தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனையை பரிசீலனை செய்வதற்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்றையதினம் ஒன்று கூடியது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளமை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்திள் 300 மெகாவாட் மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மறு அறிவித்தல் விடுக்கும் வரை மின் விநியோகத்தை தடை செய்வது அவசியமற்றது என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment