அதாவுல்லா சாய்ந்தமருது மக்களை இனியும் ஏமாற்றக்கூடாது - யஹியாகான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

அதாவுல்லா சாய்ந்தமருது மக்களை இனியும் ஏமாற்றக்கூடாது - யஹியாகான்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து இன்னுமின்னும் அந்த மக்களை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏமாற்றக்கூடாதென முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (3) மாலை ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையின் பதவிக் காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலருமென்று கூறி 9000 வாக்குகளை கபளீகரம் செய்த அதாவுல்லா பொதுத்தேர்தலிலும் அம்மக்களின் வாக்குகளைப் பெற்றார். ஆனால், நகர சபை இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை.

சாய்ந்தமருதைச் சேர்ந்த தேகா முக்கியஸ்தர் சலீமும் அதாவுல்லாவுடன் இணைந்து சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து வாக்குகளைப்பெற்று ஏமாற்றி வருகின்றார்.

இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடல்ல. ஒரு போதும் அதாவுல்லாவினால் நகர சபையைத் பெற்றுத்தர முடியாது. அவருக்கு அரசாங்கத்தில் பலமில்லாமை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது.

2022 பெப்ரவரி மாதத்துக்கிடையில் அதாவுல்லாவும் சலீமும் நகர சபையைப் பெற்றுத்தர வேண்டும். இல்லையேல், தங்களால் முடியாதென மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகக்கூறி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இன்னுமின்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முனையக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment