பொதுமுடக்க காலத்தில் மது விருந்து சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் : பதவி விலக கோரும் எம்.பிக்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

பொதுமுடக்க காலத்தில் மது விருந்து சர்ச்சை : மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் : பதவி விலக கோரும் எம்.பிக்கள்

கொரோனா வைரஸ் முதலாவது அலையின்போது பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்ட நாளில் "உங்கள் சொந்த மதுவை கொண்டு வாருங்கள்" என அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்டதற்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், பிரதமர் பொறுப்பின்றி செயல்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கையை ஒரு பிரிவு பிரிட்டன் எம்.பி.க்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

தனது மன்னிப்பு கோரலின்போது நடந்த நிகழ்வை விளக்கிய போரிஸ் ஜோன்சன், தோட்டத்தில் நடந்த நிகழ்வு "தொழில்நுட்ப ரீதியாக விதிகளுக்கு உட்பட்டது" என்றாலும் அது பொதுமக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தாம் உணர்ந்திருக்க வேண்டும். என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் தனது "அபத்தமான" பொய்கள் மற்றும் சாக்குப்போக்கு கூறியதால் அவர் இப்போது விலக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அவரது இணையர் இருவரும் சுமார் 30 பேருடன் விருந்தில் பங்கேற்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களுக்கோ வெளியே ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை சந்திப்பது தடை செய்யப்பட்டிருந்தது.

பிரதமரின் செய்தித் தொடர்பாளர் விளக்கம்
20 மே 2020 அன்று "சமூக இடைவெளியுடன் பானம்" அருந்த ஊழியர்களை அழைக்கும் மின்னஞ்சலைப் பிரதமர் பார்க்கவில்லை அல்லது பெறவில்லை என்று போரிஸ் ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை பிரதமர் அனுப்பச் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோன்சனின் அப்போதைய வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரா, அங்கு உணவு மற்றும் பானத்தை அவர் கவனித்தாரா அல்லது அவரே ஒரு பாட்டிலை கொண்டு வந்தாரா என்று கேட்டபோது, பிரதமரின் செய்தித் தொடர்பாளர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment