(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து வருட கணக்காக இடைநிறுத்தப்பட்டுள்ள தூரப் பிரதேச பயணிகள் புகையிரத சேவையினை மீள ஆரம்பிப்பதற்கு புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொது பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு தூரப் பிரதேச பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்குமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொழும்பு கோட்டை - பதுள்ளை இரவு தபால் புகையிரத சேவை,பெலியத்த வவுனியா ரஜரட,கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு, கொழும்பு கோட்டை - திருகோணமலை தபால் புகையிரத சேவை ஆகிய தூரப் பிரதேச புகையிரத சேவைகளை மீள ஆரம்பிக்கும் அறிவித்தலை புகையிரத திணைக்களம் கடந்த மாதம் 25ஆம் திகதி இரவு 7 மணியளவில் விடுத்தது.பின்னர் 2021.12.27ஆம் திகதி 3.40 மணியளவில் தூரப் பிரதேச புகையிரத சேவைகளை இரத்து செய்யும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இத்தீர்மானத்தினால் தூரப் பிரதேச புகையிரத சேவையினை பயன்படுத்துவதற்காக தயாராகவிருந்த பயணிகள் அதிருப்தியடைந்து புகையிரத நிலைய சேவையாளர்களை கடுமையாக விமர்சித்தார்கள்.
இரத்து நிறுத்தப்பட்ட தூரப் பிரதேச பயணிகள் புகையிரத போக்குவர்த்து சேவையினை கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்ட போதும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவில்லை.
தூரப் பிரதேச புகையிரத பயணிகள் போக்குவரத்து சேவை இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் கடந்த 7ஆம் திகதி அறிவித்தது. அத்தீர்மானம் இம்மாதம் 10ஆம் திகதி வரை பிற்போடப்பட்டு அதற்கான அறிவித்தல் இம்மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
நேற்று முதல் தூரபுகையிரத சேவையினை ஆரம்பிப்பதாக குறிப்பிட்டது. இருப்பினும் ஆரம்பிக்கப்படவில்லை. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் சிறந்த திட்டமிடலை செயற்படுத்தாத காரணத்தினால் பொது பயணிகள் பாரிய பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
புகையிரத சாரதிகளின் சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதால் தூரப் பிரதேச பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரு தரப்பு நியாயப்படுத்தல்களினால் பொது பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தூரப் பிரதேச பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பதில் புகையிரத திணைக்களம் முன்னெடுக்கும் திட்டங்கள் பொருத்தமற்றதாக உள்ளதால் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளோம். பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் நலனை கருத்திற் கொண்டு தூரப் பிரதேச புகையிரத சேவையினை மீள ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
No comments:
Post a Comment