நாம் கொடுப்பனவை செலுத்த தயாராகவுள்ளபோது அதனைச் செலுத்தக் கூடாதென கூச்சலிடுகின்றார்கள் : இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

நாம் கொடுப்பனவை செலுத்த தயாராகவுள்ளபோது அதனைச் செலுத்தக் கூடாதென கூச்சலிடுகின்றார்கள் : இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(நா.தனுஜா)

சர்வதேச பிணைமுறிகளுக்கான கொடுப்பனவை மீளச் செலுத்துவதற்கான இயலுமை எமக்கு இல்லை என்று ஆரம்பத்தில் கூச்சலிட்டவர்கள், அக்கொடுப்பனவைச் செலுத்துவதற்கு நாம் தயார் நிலையில் உள்ளபோது அதனைச் செலுத்தக் கூடாது என்று கூச்சலிடுகின்றார்கள் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, ஆரம்பத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் சர்வதேச பிணைமுறிகளுக்கான கொடுப்பனவை மீளச் செலுத்தக் கூடிய இயலுமை இலங்கைக்கு இல்லை என்று கூச்சலிட்டவர்கள், தற்போது அந்தக் கொடுப்பனவை மீளச் செலுத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றபோது அதனைச் செலுத்தக் கூடாது என்று கூச்சலிடுகின்றார்கள்.

அதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட இலங்கையின் இறக்குமதிகள் கடந்த 2021 ஆம் ஆண்டில் 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் இறக்குமதிகளின் பெறுமதி 19.9 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் கீழ் கடந்த 2015 - 2019 வரையான 5 வருட காலத்தில் நாட்டிற்குரிய சர்வதேச பிணைமுறிகளின் பெறுமதி 5 பில்லியன் டொலர்களிலிருந்து 15 பில்லியன் டொலர்களாக அதிகரித்த போதிலும், அக்காலப்பகுதியில் மொத்தத் தேசிய உற்பத்தி 79 பில்லியன் டொலர்களிலிருந்து 84 பில்லியன் டொலர்களாக மாத்திரமே உயர்வடைந்திருந்தது.

அதனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமநிலையின்மையை உரியவாறு கையாளவேண்டிய நிலைக்குத் தற்போதைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்று ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment