(எம்.மனோசித்ரா)
நாட்டை எதிர்வரும் 3 ஆண்டுகளில் அபிவிருத்தியடைச் செய்வதாக தெரிவித்துள்ளதன் மூலம், தனது கடந்த இரண்டு ஆண்டு நிர்வாகமும் தோல்வியடைந்துள்ளமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளும் தோல்வியிலேயே நிறைவடைந்துள்ளன என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அல்ல, 3 மாதங்களுக்கான திட்டமிடல் கூட ஜனாதிபதியிடம் இல்லை. அவ்வாறு எதிர்வரும் 3 ஆண்டுகளில் நாட்டை மேம்படுத்துவதாயின் அதற்கான வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்கத்தின் முற்போக்கற்ற தீர்மானங்களால் நாடு இன்று பெறும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமிடலும் இல்லை. அதன் காரணமாக விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட 12 வர்த்தமானி அறிவித்தல்களும் மீளப் பெறப்பட்டுள்ளன.
டொலரைப் பெற்றுக் கொள்வதிலும் இவ்வாறு எவ்வித திட்டமிடலும் இல்லாத காரணத்தினாலேயே வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதையும் தவிர்த்துக் கொள்கின்றனர்.
டொலர் நெருக்கடியால் சுமார் 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. இவற்றுக்கான தாமத கட்டணங்களை யார் செலுத்துவது? அதற்கான பொறுப்பை யார் ஏற்பது?
உள்நாட்டு விடயங்களில் மாத்திரமின்றி வெளிநாட்டு பயணங்களிலும் இந்த அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல்கள் இல்லை. அதன் காரணமாகவே இந்திய பிரதமர் நாட்டில் இல்லாத போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அந்நாட்டுக்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு திரும்பினார். காரணம் இவரது வருகையோ சந்திப்போ இந்திய பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் என ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கோருகின்றனர். நூலறுந்த பட்டம் போன்று அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டை முன்னேற்றுவதாயின் அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம். அவரால் அந்த சவாலை ஏற்க முடியாது. காரணம் அவரிடம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான திட்டமிடல் கூட கிடையாது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டவற்றின் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் நாட்டில் எவ்வாறு ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.
பாராளுமன்றத்தில் அன்றி பாராளுமன்றத்திற்கு அப்பால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றமையானது, இவ்வாறான சர்வாதிகார போக்கினை உள்ளடக்குவதற்கான முயற்சியாகக் காணப்படலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது என்றார்.
No comments:
Post a Comment