வெள்ளை உடையுடன் பொய் கூறித் திரியும் மைத்திரியின் முகத்திரை கிழிக்கப்படும் : நான் கூறுபவை உண்மை இல்லையென்றால் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கிறேன் - ரவி கருணாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

வெள்ளை உடையுடன் பொய் கூறித் திரியும் மைத்திரியின் முகத்திரை கிழிக்கப்படும் : நான் கூறுபவை உண்மை இல்லையென்றால் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கிறேன் - ரவி கருணாநாயக்க

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெள்ளை உடை அணிந்துகொண்டு பொய் கூறித் திரியும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் நற்பெயருக்கும் கட்சியின் தலைவர் மற்றும் எமது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகத்திரை கிழிக்கப்படும். முடியுமானால் பகிரங்க விவாதமொன்றுக்கு வாருங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

எவரேனும் ஒருவர் அரசியலில் ஈடுபட்டால் இன்னுமொருவரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படாமல் அரசியலில் ஈடுபட வேண்டும். அதை விடுத்து செல்லும் இடமெல்லாம் பொய் கூறித் திரிவது அரசியலுக்கு அழகல்ல என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வட கொழும்பு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு காரசாரமாக தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், "முன்னாள் ஜனாதிபதி மாத்தளையில் நிகழ்த்திய உரையொன்றை மையப்படுத்தி சில விடயங்களை முன்வைக்கவுள்ளேன். அது என்னவென்றால், 7 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிகொத்தவுக்கு வந்தபோது அவர் கூறியிருந்த விடயம் தொடர்பில் மறந்திருக்கக்கூடும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதியன்றுதான், நல்லாட்சி அரசாங்கத்தின்போது என்னை நிதியமைச்சராக நியமித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன செயற்பாட்டு அரசியலுக்கு திடீரென வந்துள்ளார். அவரின் அரசியல் செயல்பாடுகள் எவ்வாறானதாக இருப்பினும் பரவாயில்லை. எனினும், ஏனையோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அவருக்கு ஜனாதிபதி என்ற அந்தஸ்தை கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளாலேயே அவர் ஜனாதிபதியானார். அவரை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சி என்பதை அவர் மறந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு அவரின் கைகளிலேயே இருந்தது. எனினும், எமது நாட்டின் பாதுகாப்பை சீர்குலைத்தார். எமது ஒற்றுமையை இல்லாமல் செய்தார். ஆயினும், தற்போது சுத்தமானவர் போன்று உரை நிகழ்த்திகிறார்.

அன்று 2015 இல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்காகவே, ஐக்கிய தேசியக் கட்சி, சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் என அனைவரும் மைத்திரிபால சிறிசேனவுக்கு பேராதரவு வழங்கியிருந்தனர். அதன் மூலமே அவர் ஜனாதிபதியானார். அவற்றை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

இந்நாட்டில் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காகவே பாடுபட்டோம். சுத்தமான எண்ணங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவே, ஆயிரக்கணக்கான சிவில் அமைப்புக்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைக்கோர்த்தன. அவற்றை ஞாபகப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். இல்லாவிட்டால் எம்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமலாக்கப்படும்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் மக்கள் தவறான கருத்தை கொண்டுள்ளமை எமக்குள்ள வேதனையாகும். எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

இவர் ஏனையோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. ஆனால், இவர் எதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதற்கு எனக்கு 100 காரணங்களை முன்வைக்க முடியும். எனினும் 6, 7 காரணங்களை தற்போதைக்கு முன்வைக்கிறேன். அதற்கு முதலில் நான் கூறும் இந்த காரணங்களில் உண்மைத்தன்மை இல்லை என அவர் கருதினால் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கிறேன்.

இதில் முதலாவது விடயமானது, அன்று ஜனாதிபதித் தேர்தல் (2015) வைப்பதற்கு இருக்கையில், 2014 நவம்பர் மாத கடைசி மற்றும் டிசம்பர் மாத முற்பகுதிகளில் இலட்சக் கணக்கான டொலர் நாட்டுக்கு வந்ததாக ஓர் சர்ச்சைக்குரிய செய்தி பரவியிருந்தது. இதன்போது அவருக்கு தெரிந்த ஓர் நிறுவனமொன்றுக்கு மத்திய வங்கியில் பணம் வந்ததாகக்கூறி மத்திய வங்கியில் பாரிய பிரச்சினையொன்று வந்திருந்தது.

இதனால், எமது ஜனாதிபதி அபேட்சகர் கடைசித் தருவாயில் எமக்கு இல்லாது போய்விடுவார் என எண்ணி அவருக்காக மத்திய வங்கிக்குச் சென்று அதனூடாக வழக்குத் தொடுத்தோம். அதன் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் நாம் வென்றோம். இந்த வெற்றியின் பின்னரே இந்தப் பிரச்சினை மேலெழும்ப ஆரம்பாகிறது. இந்த ‍டொலர் வந்தமை தொடர்பிலான பிரச்சினை மத்திய வங்கியில் உள்ளது. இந்த டொலர் எவ்வாறு வந்ததென்பது குறித்து பிரச்சினை எழுகிறது.

உங்களுக்குத் தெரியும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட டொலர் வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது சிறைச்சாலையில் அடைக்க முடியுமான குற்றமாகவே கருத்திற்கொள்ளப்படும். இவ்வாறான நிலையில் மத்திய வங்கி ஆளுநர் இந்த விசாரணையை கூடிய விரைவில் முடிக்குமாறு கூறியிருந்தபோதிலும், வழக்கு விசாரணை நிறைவடையவில்லை.

மத்திய வங்கி தொடர்பான பிரச்சினை என பெரிதாக எல்லோரும் கூறிக்கொண்டாலும். இதுதான் பிரச்சினைக்கு ஆரம்பம். இந்த பிரச்சினைதான் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்காகத்தான் பொய்யான தகவல்களை அவர் கூறினார்.

நாமும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக கதைக்கக்கூடாது. அது அரசியலுக்கு அழகல்ல என எண்ணினோம். ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தமையானது, ஒழுக்கத்துடன் வழக்கு விசாரணை முடிப்பதற்காகவே ஆகும். எனினும், அவர் மத்திய வங்கி ஆளுநரை மாற்றினார்.

இதன் பின்னர் சிறிது காலத்தில் இந்த பிரச்சினை முடிந்தது என்றே எங்களுக்கு அறியக்கிடைத்தது. எனினும், உள்ளே என்ன நடந்தது என்றோ, இந்த பிரச்சினை எவ்வாறு முடிந்தது என்றோ எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இவ்வாறுதான் வெள்ளைத் துணிகளை உடுத்தி அரசியல் செய்கிறார்கள் இந்த நபர்கள்.

இரண்டாவது விடயமானது, சிகரெட் தொடர்பில் வைராக்கியமான அரசிய‍லொன்றை கொண்டு சென்றார். ‍விடுதி, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கொடுக்க வேண்டாம் என கூறியவர், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கேட்டு, கலால் திணைக்களத்தக்கு 2015 ஜூன் மாதத்தில் கடிதம் அனுப்புகிறார்.

எமக்கு செய்ய வேண்டாமென கூறிக்கொண்டு, அவர் இவற்றை செய்திருந்தார். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உள்ளன. இது தொடர்பான விடயங்கள் நாமும் அறிந்திருக்கவில்லை. ஆயினும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இதனையும் ‍ வெள்ளை ஆடை அணிந்த அவரே செய்தார். இவ்வாறான காரணங்களால் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது விடயம், இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இரண்டு வகை உள்ளன. ஒன்று ஆரம்பம் முதல் கடைசி வரை வரி செலுத்தி இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. இரண்டாவது இரும்புத் துண்டுகளை சேர்த்து, அதன் பின்னர் அவற்றை உருக்கி இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. நாட்டுக்கு வரிப்பணம் தேவையென்றபடியால், அவற்றின் ஊடாகவும் வரியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்தோம்.

ஏறக்கு‍றைய இலட்சத்து 65 ஆயிரத்து டொன் எடையுடைய இரும்புக்கு வரி அறவிடப்படவில்லை. இதனால் எமக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இது போன்ற பிரச்சினைகளை வைத்துக் கொண்டுதான் நாம் நல்லாட்சிக் காலத்தில் பயணித்தோம். இதனால்தான் எமது பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.

நான்காவது, வலுசக்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சூரிய எரிசக்தி திட்டம் ‍ கொண்டு வரப்பட்டது. விலை மனுக்கோரல் (டெண்டர்) இல்லாமல் 300 கோடிக்கு அனுமதியை அளிக்குமாறு எமக்கு உத்தரவிட்டிருந்தார். இது குறித்த எடுக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கிறேன். அதில் அவரின் கையொப்பம் உள்ளது. இதில் நான் கையொப்பம் இடவில்லை. இதனால் வைராக்கியத்தை என்மீது அவர் கொண்டிருந்தார். இதன் காரணமாகத்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பிரச்சினை ஏற்படுகிறது.

ஐந்தாவது விடயம்தான், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒன்றரை வருடத்துக்குப் பின்னர் அமைச்சரவைக்கு வருகிறார். அவர் ஒரு இராணுவ வீரர். யுத்தத்தை நிறைவு செய்த அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பதற்காக குண்டுத் துளைக்காத வாகனமொன்று வழங்க வேண்டும். கூடிய பணம் விரயம் செய்யக் கூடாது என்பதற்காக பழைய வாகனமொன்று திருத்திக் கொடுக்கப்பட்டது. அதற்கு நிதி என்னால் ஒதுக்கப்பட்டபோது, கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டார். எனினும், எம்மால் அப்படி இருக்க முடியாது. யுத்தத்தை நிறைவு செய்யவருக்கு பாதுகாப்புக்காக வாகனம் கொடுத்தோம். இதனால் எம்முடன் வைராக்கியம் கொண்டார்.

கடைசியாக, தேர்தல் காலங்களில் முதலமைச்சர்கள் வேறு தரப்பினருடன் இருந்தனர். இதன்போது அவர்களுக்க நிதி கொடுக்க வேண்டாம் என கூறினார். இவ்வாறு ஒரு வருட காலம் சென்றதன் பின்னர், ஏன் எமக்கு நிதியை கொடுக்க மறுக்கின்றீர்கள் என அவர்கள் எதிரிலேயே எம்மிடம் அவர் கேட்டிருந்தார். நாங்கள் ஒழுக்கமான அரசியலில் ஈடுபடுவர்கள் என்ற ரீதியில், அவர்தான் அவ்வாறு கூறினார் என அவர்களுக்கு கூற முடியாது போனது.

இவ்வாறான ஒருவர் தற்போது ஊரெல்லாம் மற்றவர்களை பற்றி பொய்யான தகவல்களை கூறிக் கொண்டுத் திரிகிறார். எனக்கு பிரதமர் இருக்கவில்லை. அமைச்சரவை இருக்கவில்லை என கூறிக்கொண்டிருக்கிறார். அப்படியானால். நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியானீர்கள்? ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளால்தானே ஜனாதிபதியானார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்" என்றார்.

No comments:

Post a Comment