(இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை. மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சுப் பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமயந்த குறிப்பிட்டார்.
மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று காலை வருகை தந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு
கேள்வி - பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன ?
பதில் - தொலைநோக்கு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன்.இது பெரியதொரு விடயமல்ல. 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றது. 3 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன். நான் சட்டத்தரணி நாளை முதல் தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுபடுவேன்.
கேள்வி - பதவி நீக்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா ?
பதில் - இல்லை பதவி நீக்கப்பட்டதாக காலையில் (நேற்று) ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விரும்பிய ஒருவரை பதவிக்கு நியமிக்கவும், பதவி நீக்கவும் முடியும். பதவி நீக்கத்திற்கான காரணம் கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.
கேள்வி - பதவி நீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?
பதில் - கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் என்னிடம் மரக்கறிகளின் விலை வாழ்க்கைச் செலவு உயர்வு குறித்து வினவினார்கள். பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1200 ரூபாவிற்கு விற்கப்படுகிறது அதற்கான காரணம் என்ன என்று வினவினார்கள். விவசாயத்துறை அமைச்சு தோல்வி, விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை தோல்வி என மக்களின் தரப்பில் இருந்து கருத்துரைத்தேன்.
கேள்வி - அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள் .அவர்கள் ஏன் பதவி நீக்கப்படவில்லை ?
பதில் - நான் சந்தையில் குறிப்பிட்ட விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். கல்வி தகைமைக்கு அமைய நலன்புரி தொழிலாளராக முடியாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றி தெரியாது.
கேள்வி - உங்களை பதவி விலக்கி அரசாங்கம் எதனை செய்யப்போகிறது ?
பதில் - அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சிரேஷ்ட அரசியல்வாதி. அரசியலில் எனக்கான கடமையினை முறையாக நிறைவேற்றியுள்ளேன். பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசிர்வாதமாக அமையும்.
கேள்வி - ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்த்தீர்களா ?
பதில் - அவ்வாறு தீர்மானம் எடுக்காமலிருந்தால்தான் பிரச்சினை. தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்திற்கமைய நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதை அறிய முடிகிறது. அது தொடர்பிலும், மக்கள் தொடர்பிலும் கருத்துரைப்பது அவசியமாகும். மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவே மக்கள் எம்மை தெரிவு செய்கிறார்கள். மக்களுக்காகவே கருத்துரைத்தேன்.
கேள்வி - எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும்.
பதில் - அரசியலில் இருந்து நான் புறக்கணிக்கப்படவில்லை. 1991ஆம் ஆண்டு கோட்டை நகர சபையில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக எனது அரசியல் பயணம் ஆரம்பமானது. கூட்டணியின் செயலாளராக 11 வருட காலம் பதவி வகித்துள்ளேன். மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தில் கூட்டணியை ஒழுங்குப்படுத்தியுள்ளேன். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒரு முறை கூட தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை என்றார்.
No comments:
Post a Comment