'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' - தென்னாப்பிரிக்க பெண் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' - தென்னாப்பிரிக்க பெண் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

தென்னாப்ரிக்காவின் ஒரு பிராந்திய சுகாதார் அமைச்சர் "புத்தகங்களை விரியுங்கள், உங்கள் கால்களை மூடுங்கள்" என பாடசாலை மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

போபி ரமதுபா என்கிற அப்பெண் அமைச்சர், ஒரு மேல்நிலைப் பாடசாலையில் பாலுறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பதையும், பதின் பருவத்திலேயே கர்ப்பமடையும் விகிதத்தைக் குறைப்பது குறித்தும் பேசச் சென்ற போது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையாகியிருக்கிறது.

சமூக வலைத்தள பயனர்கள் அவரது கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர், மேலும் அது ஏன் பெண்களுக்கு மட்டுமே கூறப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தான் கூறியது ஆண்களுக்கும்தான் என போபி ரமதுபா தன் வாதத்தை நியாயப்படுத்துகிறார்.

தென்னாப்ரிக்காவில் உள்ள லிம்போபோ மாகாணத்தின் சுகாதார அமைச்சராக இருக்கும் போபி ரமதுபா, செகக்கபெங் நகரத்தில் உள்ள குவனெனெ மேல்நிலைப் பாடசாலையில் கடந்த புதன்கிழமை, கல்வி ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

"பெண் குழந்தைகளுக்கு நான் சொல்வது இதுதான் உங்கள் புத்தகத்தை விரியுங்கள், உங்கள் கால்களை மூடுங்கள். உங்கள் கால்களை விரிக்காதீர்கள், புத்தகத்தை விரியுங்கள். மிக்க நன்றி" என அவர் பேசினார்.

பெண்கள் வயதான ஆண்களால் விலை உயர்ந்த விக்குகள், ஸ்மார்ட்ஃபோன்கள் போன்ற பொருட்களால் ஆசைகாட்டி கவரப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இவரது பேச்சு காணொளியாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட பின், அவர் பயன்படுத்திய சொற்கள் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன.

"குழந்தைகளிடம் துன்புறுத்தல், பாலியல், பாலுறவின் போது அனுமதி பெறுவது போன்ற விஷயங்களைக் குறித்து இப்படி பேசுவது சரியான வழிமுறையல்ல" என ஒரு சமூக வலைத்தள பயனர் கூறினார்

போபி ரமதுபாவின் கருத்து பிரச்சினைக்குரியது என எதிர்கட்சியைச் சேர்ந்த சிவிவே குவாருபே கூறினார்.

"பாடசாலை மானவர்களிடம் பாலுறவுக்கு முன் அனுமதி பெறுவது குறித்து அர்த்தமுள்ள ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கலாம். அதற்கு பதிலாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுகிறீர்கள். பெண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கிறீர்கள்." என ட்விட்டர் சமூக தளத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், தான் ஆண்களையும் குறிப்பிட்டுத்தான் அக்கருத்தைக் கூறியதாகவும் தென்னாப்ரிவிக்காவின் செய்தித்தளமான டைம்ஸ் லைவிடம் கூறினார் அமைச்சர் போபி ரமதுபா.

"பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டாம், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என ஆண்களுக்கும்தான் கூறினேன்" என்றார் ரமதுபா. மேலும் தன் தொகுதியான லிம்போபோவின் வாக்காளர்கள் இக்கருத்தை பாராட்டியதாகவும் கூறினார்.

"இது போன்ற விஷயங்களை வெளிப்படையாகக் கூற தங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும், உள்ளதை உள்ளபடி கூறியதற்கு எனக்கு நன்றி கூறினார்கள்" என்றும் கூறினார் போபி ரமதுபா.

கடந்த 2020ஆம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் கிட்டத்தட்ட 33,400 பெண்கள் 17 வயதுக்குள் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அரசு தரவு கூறுகிறது.

தென்னாப்ரிக்காவில் சரியான பாலியல் கல்வி மற்றும் மலிவு விலையில் சரியான சுகாதார சேவைகள் கிடைக்காமல் இருப்பது போன்றவை, பதின்பருவத்தில் பெண்கள் கர்ப்பமடைவதற்கு காரணமாக இருக்கின்றன.

No comments:

Post a Comment