இலங்கை அமரபுர மஹா நிக்காயவின் சங்கைக்குரிய மஹா நாயக்கர் பதவி பெற்றுள்ள தொடம்பஹல சந்தசிறி தேரருக்கு சான்றுப் பத்திரம் வழங்கும் அரச நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) பிற்பகல் நடைபெற்றது.
ஜனாதிபதியினால் மஹா நாயக்கத் தேரருக்கு இந்தச் சான்றுப் பத்திரம் வழங்கப்பட்டதுடன், பிரதமர் விஜினி பத்திரத்தை வழங்கினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யூ ஹன் து (U Han Thu), அமரபுர நிக்காயாபிவுர்த்தி நிர்வாக சபையின் தலைவர் அஜித். டீ சொய்சா, பிரதித் தலைவர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர், தேரருக்கான பிரிக்கர வழங்கினர்.
இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், நிக்காயவின் மறுசீரமைக்கப்பட்ட விஹாரைக் கோப்பகம், அச்சபையின் செயலாளர் ஆர்.ஏ.டி. சிறிசேனவினால் தேரருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைதியான சமூகம், நல்ல பிரஜை மற்றும் சிறந்த பௌத்தர்களை உருவாக்குவதற்காக மஹா நாயக்கத் தேரர் ஆற்றிய மாபெரும் அர்ப்பணிப்புகளுக்கு, முழு பௌத்த சமூகமும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி தேரர், பல்வேறு நாடுகளுக்குச் சென்று புனித பௌத்த பிரசங்கங்களை நிகழ்த்தியதாகவும் தேரவாத பௌத்த பாரம்பரியத்தை மக்கள் நலனுக்காக உபதேசம் செய்தவர் என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அமரபுர நிக்காயாவின் எதிர்காலப் பணிகளின் பாரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே மஹா நாயக்கர் பதவிக்கு சந்தசிறி தேரர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
2004 சுனாமிப் பேரழிவால் சேதமடைந்த விஹாரைகளில் நூலகங்களை நிர்மாணிப்பதற்கு, சங்கைக்குரிய தொடம்பஹல சந்தசிறி தேரர் வழங்கிய பங்களிப்பு, பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்கு அயராது பாடுபடும் தேரர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுத்ததாக, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
விஹாரைகளைப் பாதுகாக்கவும் அவற்றை மறுசீரமைப்பதற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெரும் பங்காற்றி வருகின்றது எனத் தெரிவித்த பிரதமர், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும், சங்கைக்குரிய தொடம்பஹல தேரரினால் குறைவின்றி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மஹா நாயக்கர்கள், அனுநாயக்கத் தேரர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நிக்காயவின் நிர்வாக சபை உறுப்பினர்கள் எனப் பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment