புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக, 14 புகையிரத சேவைகள் இன்றையதினம் (31) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, மருதானை புகையிரத நிலையத்தில் 05 கட்டுப்பாட்டாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 17 பேர் அவர்களின் தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தறை (03 பேர்), சிலாபம் (03 பேர்), பொல்கஹவெல (02 பேர்), மஹவ (ஒருவர்), கண்டி (07 பேர்), நாவலப்பிட்டி (05 பேர்), அநுராதபுரம் (ஒருவர்), மட்டக்களப்பு (ஒருவர்), அளுத்கம (03 பேர்) ஆகிய புகையிரத நிலையங்களில் பணியாற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கும் புகையிரதங்களுக்கு கட்டுப்பாட்டாளர்களை ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பிரதான பாதையிலான 06 புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், கரையோரப் பாதையில் 02 புகையிரத சேவைகளும், புத்தளம் மார்க்கத்தில் 03 புகையிரத சேவைகளும், களனிவெளி பாதையில் 02 புகையிரத சேவைகளும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், வடக்கு புகையிரத பாதையில் குருணாகல் வரை பயணிக்கும் புகையிரதம் உள்ளிட்ட 14 புகையிரத சேவைகள் இன்றைய தினம் (31) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இவ்வாறு புகையிரத சேவைகளை இரத்துச் செய்ததன் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் வருந்துவதாக தெரிவித்துள்ள புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரதங்கள் மூலம் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்க எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment