(எம்.எப்.எம்.பஸீர்)
சொத்து பொறுப்புக்களை முன் வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழு விடுத்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற பொதுச் செயலர் முன் வைத்துள்ள மேன் முறையீட்டு மனு தொடர்பிலான விசாரணையிலிருந்து இரு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.
பாராளுமன்ற பொதுச் செயலர் தம்மிக தசநாயக்க, பிரதி பொதுச் செயலர் கே.ஏ. ரோஹனதீர ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த மேன் முறையீட்டு மனுவில், பிரதிவாதியாக இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று (11) மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே நீதிபதிகளான ருவன் பெர்ணான்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பிலான விசாரணைகளில் இருந்து விலகுவதாகவும், மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதிக்கு பாரப்படுத்துதுவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
ஊடகவியலாளர் சாமர சம்பத் உள்ளிட்டோர் முன் வைத்த மேன் முறையீட்டை விசாரித்திருந்த தகவல் அறியும் ஆணைக்குழு, சொத்து பொறுப்பை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்த, தகவல் அறியும் ஆணைக்குழு பாராளுமன்ற செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தியே தற்போது மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment