இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமெனவும், வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதன் மூலம்தான் இந்தியாவின் பாதுகாப்பும் எதிர்கால நலனும் கட்டியெழுப்பப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கேந்திர முக்கியத்துவம் உள்ள இடமாக உள்ளது. அவ்வாறான சூழலில் இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்குள் வருகின்றமை அனைவராலும் அவதானிக்கப்பட்டு வருகிறது. இது அயல்நாடான இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும்.
எனவே, இந்தியா ஈழத் தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவை பலப்படுத்துவதற்கு நீண்ட காலமாகவே புரையோடிபோயுள்ள இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.
மேலும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வடக்கு கிழக்கில் செய்வதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பும் எதிர்கால நலன்களும் கட்டியேழுப்பப்படும் என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். இது சாதாரண இராஜதந்திரம் தெரிந்த பொதுமகனுக்கே விழங்கும் போது இந்தியா அதில் மௌனம் காப்பது கவலையளிக்கிறது.
இலங்கையின் இனப் பிரச்சினையை இந்தியாவே தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கையை இந்தியா கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
கேசரி
No comments:
Post a Comment