2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட இருந்த நிலையில் அது ஜனவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் இன்று (06) இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 08 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக சம்பத் என்பவர் வழக்கு தொடரப்பட்ட சந்தர்ப்பத்தில் வௌிநாடு சென்றிருந்தார்.
அவரின்றி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் தரப்பினரால் அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என சாட்சி விசாரணைகளின் நிறைவில் நீதிபதிகள் குழாம் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த பிரதிவாதியை விடுதலை செய்த நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்ப்பு ஜனபரி 12ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தாலும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் சட்டமா அதிபருக்கு காணப்பட்டது.
No comments:
Post a Comment