நாடு முழுவதும் நாளை (10) முதல் தினமும் 2 - 2 1⁄2 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், தினமும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும், முற்பகல் 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் தலா 45 நிமிடங்களாக இரண்டு தடவைகளும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் பிரச்சினை காரணமாக, இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் (CPC) அனல் மின் நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளமை காரணமாகவும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு மூடப்பட்டுள்ளமை, கெரவலப்பிட்டியிலுள்ள யுகதனவி தொகுதியின் பராமரிப்பு பணிகள், களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு போன்ற விடயங்கள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய அதிக மின்சார கேள்வி ஏற்படும் நேரத்தின் போது, தேசிய கட்டமைப்புக்கு அவசியமான போதியளவான மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி இவ்வாறான நிலைமைகளின் கீழ், எதிர்வரும் நாட்களில் நாட்டில் அவ்வப்போது மின்சாரம் தடைப்படும் வாய்ப்புகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment