நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயம், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் இரண்டு பிரதான ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 2019 ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சுமார் முந்நூறு உயிர்களைக் காவு கொண்டும் ஐநூறுக்கு மேற்பட்ட சிறார்கள், இளைஞர் யுவதிகள், வயோதிபர்கள் உள்ளடங்கலாக அப்பாவி மக்களை ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டும் இன்றைய தினத்துக்கு (2022 ஜனவரி 14) 1,000 நாட்கள் பூர்த்தியாகின்றன என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 1,000 நாட்கள் நிறைவடையும் நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தேசிய மக்கள் சக்தி அவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த அரசாங்கம், அதேபோல் அச்சமயம் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான பாதுகாப்பு சூழலழைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தி, ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஆகிய இந்த இரண்டு அரசாங்கங்களும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக போலியான முன்னெடுப்புகளையும் அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதன் பொருட்டு பல்வேறு தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஒட்டு மொத்த நாட்டு மக்களதும் வேண்டுகோள் என்னவெனில் இந்தக் கொடிய குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை மட்டுமின்றி, அதன் திட்டமிடலுக்குப் பின்னால் மூளைகளாக செயல்பட்டவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதுவாகும்.
ஆனால் அது எதுவுமே நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதுடன் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் பெரும் புலம்பல் மட்டுமே இதுவரையும் எமக்குக் கேட்கிறது.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பான மற்றும் அதன் திட்டமிடலுடன் தொடர்பான ஒவ்வொரு நபரும், குழுவும் அவர்களின் தராதிரம் எதுவாக இருந்தாலும் அவ் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.
பாதுகாப்பு குறித்து உயர்த்திப் பேசும் தற்போதைய வாய்ப்பேச்சு அரசாங்கத்தால் இந்த விசாரணைகளை முறையாக நடத்தி, அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாமல் இருப்பது குறித்து தேசிய மக்கள் சக்தி தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஆயிரம் நாட்களை நிறைவடையும் இத்தருணத்தில், இந்த காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய மக்கள் சக்தி தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் உயிரிழந்த, ஊனமுற்ற தங்கள் உறவினர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்தி தமது ஆதரவை எப்போதும் வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தற்போதைய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment