பொலிஸாருக்கு விசாரணை செய்யும் முறைமையை கற்பிக்காமல், அவர்களது விசாரணைகள் தொடர்பில் விமர்சிக்காமல் அவர்கள் சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விபரங்களை நாட்டு மக்களும் பேராயர் கார்டினலும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள முடியமென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.
அத்துடன் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன்னர் கண்டிப்பாக நிறுத்தப்படுவரென்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.
விசாரணைகள் முடிவு பெறுவதற்கு முன்னர் அது தொடர்பில் வீணான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜெயஸ்ரீ ஆசி வழங்கும் நிகழ்விற்கான அழைப்பிதழ்களை அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்களுக்கு வழங்கும் பொருட்டு நேற்று கண்டிக்கு விஜயம் செய்திருந்த போதே அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், சம்பவம் ஒன்று இடம்பெற்று 24 மணித்தியாலத்திற்குள் அந்த சம்பவம் தொடர்பில் விமர்சிப்பபது சாதாரணமானது என நான் நினைக்கவில்லை.
விசாரணையொன்று நடத்துவது என்பது இலகுவான காரியமல்ல. அதனை நினைத்தவாறு 24 மணித்தியாலத்திற்குள் முடிக்கவும் முடியாது. விசாரணை ஒன்று நடத்தப்படும்போது பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அந்த விசாரணைகள் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள் உள்ளன. மேலும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பழைய படங்கள் உள்ளன.
எனவே எந்த ஒரு விசாரணைகள் தொடர்பிலும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என நான் நினைக்கின்றேன். இதற்காக பல மாதங்கள் எடுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. குறைந்தபட்சம் சில நாட்களாவது தேவைப்படும் என்று நான் நினைக்கின்றேன்.
எனவே இது சம்பவமொன்று நடைபெற்று அது தொடர்பான விசாரணைகள் முடிவு பெறுவதற்கு முன்னர் அந்த விசாரணை தொடர்பில் விமர்சிப்பது என்பது சாதாரணம் அல்ல.
தேவாலயங்கள், விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மத தலங்களில் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம்.
சம்பவத்தில் மேற்படி தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கைக்குண்டை அங்கு வைத்த சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரதிபலனாக இன்னும் பலர் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் நான் நாட்டு மக்களிடம் ஒரு விடயத்தில் வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன். சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்துக்குள் அல்லது 24 மணி நேரத்துக்குள் இந்த விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து கைது செய்ய முடியுமாயின் அது ஒரு அதிசயமாவே இருக்கும்.
இந்த சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் தெரிந்ததை விட பல்வேறு விடயங்கள் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அந்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அது தொடர்பிலான எந்த ஒரு கருத்தையும் இப்போதைக்கு கூற முடியாது
இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல சந்தேகநபர்களும் சட்டத்திற்கு முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவார்கள் என்று நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் என்னால் உறுதிமொழி வழங்க முடியும் என்றார்.
குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் அதனால் சிசிரீவி சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கார்டினல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர்,
நான் நினைக்கின்றேன் கார்டினல் எதனைக் கூறினாலும் அவர் கூறுவதை விட பல கோணங்களில் சிந்தித்து உரிய விசாரணைகளை தேவைக்கேற்ப மேற்கொள்வதற்குத் தேவையான சகல திறமைகளும் சிஐடியினருக்கும் பொலிஸாருக்கும் இருக்கின்றது.
சட்டம் தொடர்பாகவும் விசாரணைகள் தொடர்பாகவும் இதற்கு முன்னர் விசாரணைகளை மேற்கொண்ட அனுபவமுள்ள அதிகாரிகளே இந்த விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களது விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்
எனவே இந்த விடயத்தில் நாங்கள் அவசரப்பட முடியாது. பொலிஸாருக்கு விசாரணை செய்யும் முறைமையை கற்பிக்காமல் அவர்களது விசாரணைகள் தொடர்பில் விமர்சிக்காமல் அவர்கள் சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விபரங்களை நாட்டு மக்களும் கார்டினலும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள முடியும்.
இதற்கு முன்னரும் லங்கா ஹொஸ்பிடலில் இதுபோன்ற சம்பவம் இடம்பெற இருந்தது. அந்த சம்பவம் தொடர்பிலான சகல சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அதை போன்று இந்த சம்பவத்திலும் தேடித்தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரிகள் தொடர்பில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏனெனில் அந்த அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் தனது விசாரணையை, பணிகளை, சேவையை முன்னெடுக்கின்றனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ்மா அதிபருக்கு முடியாவிடின் அவரது கோட்டை கழட்டி விட்டு செல்லுமாறு கார்டினல் கூறியுள்ளார். இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என மற்றுமொரு ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் :
பொலிஸ்மா அதிபருக்கு கோட்டை வழங்கியவர் கார்டினல் அல்ல. எனக்கு தெரியாது. இதற்கான பலம் அவருக்கு இருக்கின்றதா என்று என்றாலும் கருத்துக் கூறும் உரிமை அவருக்கு உண்டு. என்னைப் பொருத்தமட்டில் பொலிஸ்மா அதிபர் இது தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பது பற்றி பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் நான் அறிந்துள்ளேன் என்றும் விளக்கமளித்தார்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment