(எம்.எப்.எம்.பஸீர்)
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் குறித்து தீர்மானம் எடுக்கும் போது நிதி அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறி செயற்பட்டுள்ளதாக அமைச்சர்களான விமல், வாசு, கம்மன்பில சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா உயர் நீதிமன்றில் வாதிட்டார்.
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான பரிசீலனைகள் நேற்று (10) மீளவும் உயர் நீதிமன்றில் இடம்பெற்றன.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அம்மனுக்கல் இவ்வாரு பரிசீலனைக்கு வந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் மனுவின் பிரதிவாதிகளான, எனினும் மனுதாரர்களுக்கு ஆதரவாக சத்தியக் கடதாசிகளை சமர்ப்பித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா வாதங்களை முன் வைத்தார்.
'கனம் நீதியரசர்களே, இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் எந்த அமைச்சருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவும் இல்லை. எனவே எனது சேவை பெறுநர்கள் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதாக எந்த வகையிலும் குற்றம் சுமத்த முடியாது. அதனால்தான் இந்த மூன்று அமைச்சர்களும், இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இது விடயத்தில் கலந்துரையாடல் ஒன்றினை கோரியிருந்தனர். இங்கு நிதி அமைச்சரே அமைச்சரவை கூட்டுப் பொறுப்பினை மீறியுள்ளார்.
சட்டமா அதிபர் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும். எந்த வகையில் அழுத்தங்கள் வந்தாலும் அவர் சுயாதீனமாக தனது கடமைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வொப்பந்ததுடன் தொடர்புடைய அமெரிக்க நிறுவனம், நியூயோர்க் பங்கு சந்தையில், பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய்யானது. இந்த நிறுவனத்தின் நிதிப் பலம் தொடர்பில் பாரிய பிரச்சினை எழுகிறது. அவ்வாறான நிறுவனம் ஒன்றுக்கு தேசிய சொத்துக்களின் எதிர்க்காலத்தை பொறுப்பளிப்பது என்பது ஆபத்தானது. அத்துடன் அந்த நிறுவனம் முன் வைத்திள்ள திட்ட கட்டமைப்பில் உள்ள தகவல்கள் கூட ஒன்றுக்கொன்று முரணானதாக அமைந்துள்ளது' என வாதிட்டார்.
இதன்போது கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டதா என பிரதம நீதியரசர் வினவினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, அவ்வாறான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படாத நிலையில், அது நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.
அதனால் இந்த ஒப்பந்தம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலர் கையெழுத்திட்டது எப்படி என்பது தொடர்பில் பாரிய கேள்வி நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கீடு செய்த சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணம், 'கனம் நீதியரசர்களே, இதில் எங்களுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை. தூர நோக்குடன் இந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் பிரதிவாதிகளான அமைச்சர்கள் 3 பேரும் அறியாமல் இருந்திருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என தெரிவித்தார்.
அதனையடுத்து மனுவின் மற்றொரு பிரதிவாதியக பெயரிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் வாதங்களை முன் வைத்து, குறித்த ஒப்பந்தம் சட்ட ரீதியானது என வாதிட்டார்.
இதனையடுத்து மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் இன்று 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் 27 பேர், இலங்கை மின்சார சபை, வெஸ்ட் கோஸ்ட் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கொள்வனவு செய்யும் அமரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரிஸ் எனர்ஜி, நிதி, மின்சார, வலு சக்தி அமைச்சுக்களின் செயலர்கள், அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இவர்களில் அமைச்சரவை அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்காக சட்டமா அதிபர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராகும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் (ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா) ஆஜராகிறார். மேலும் சில பிரதிவாதிகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகிறார்.
இவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் கடந்த 2021 டிசம்பர் 16 வியாழக்கிழமை முதல் உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment