இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டதத்தினை முன்னெடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பின்றி முன்பதிவு செய்யப்பட்ட புகையிரதங்களை தன்னிச்சையாக இரத்து செய்தல், புகையிரத ஊழியர்களை உரிய முறையில் நிர்வாகம் செய்யாமை, வழக்கமான புகையிரத நேர அட்டவணையை அமுல்படுத்தாமை, இராஜாங்க அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளை அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பணிகளில் இருந்தும் விலக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் இன்றையதினம் (13) 200 இற்கும் மேற்பட்ட புகையிரதப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும், 80 அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாகவும், புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் பாரிய அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, நாளைய தினம் (14) தைப்பொங்கல் தினம் என்பதுடன், அதனைத் தொடர்ந்து வரும் மிக நீண்ட விடுமுறை காரணமாக தங்களது ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இதனால் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment