(நா.தனுஜா)
வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள டொலர்களை வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வெளிநாட்டு நாணயக் கணக்கைப் பேணும் சில வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கான கோரிக்கை குறித்த வங்கிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக விண்ணப்பமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளைச் செய்திருந்தனர்.
இவ்வாறான சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த ஊடகவியலாளரொருவர், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தனது வெளிநாட்டு நாணயக் கணக்கில் உள்ள அனைத்து அமெரிக்க டொலர்களும் ரூபாவாக மாற்றப்படப் போவதாக தனக்கு தனியார் வங்கியொன்றினால் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி தனது டொலர்கள் ரூபாவாக மாற்றப்படுவதை அறிந்திருப்பதுடன் அதனை ஏற்றுக் கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தும் வகையிலான படிவமொன்றில் கையெழுத்திடுமாறு அவ்வங்கி கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தான் அதற்கு மறுத்து விட்டதாகவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு பல உள்நாட்டு வங்கிகள் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களின் கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றும் பணிகளை ஆரம்பித்து விட்டதாக குறித்த வங்கி தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது வெளிநாட்டு நாணயக் கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கு அனுமதியளிக்காவிடின் என்ன நேருமென்று வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் அனுமதியின்றி தம்மால் டொலர்களை ரூபாவாக மாற்ற முடியாது என்றும், ஆனால் குறித்த கணக்கு தொடர்பில் மேலும் சில வரையறைகள் விதிக்கப்படலாம் என்று அவர்கள் பதிலளித்ததாகவும் மேற்படி ஊடகவியலாளர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அத்தோடு அவ்வங்கியால் தன்னிடம் கையெழுத்திடுமாறு கோரப்பட்ட படிவத்தையும் பகிர்ந்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அதனூடாக மேற்கண்டவாறான தெளிவுபடுத்தலை வழங்கியிருக்கின்றார்.
வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக் கணக்கிலுள்ள டொலர்களை வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு நாட்டிலுள்ள வங்கிகளுக்கு மத்திய வங்கி பணிப்புரை வழங்கியிருப்பதாக சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை அஜித் நிவாட் கப்ரால் அப்பதிவில் தெரிவித்திருக்கின்றார்.
இருப்பினும் ஆளுநரின் இந்த டுவிட்டர் பதிவு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது டுவிட்டர் பக்கங்களின் ஊடாக விமர்சனங்களை முன்வைத்திருப்பதுடன் 'வெளிநாட்டு நாணயத்தை வலுகட்டாயமாக மாற்றும் சம்பவம் எனக்கும் நேர்ந்தது' என்ற வசனத்துடன் அவ்வாறான அனுபவத்திற்கு முகங்கொடுத்தவர்கள் அதனைத் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .
இதேவேளை, 2022 ஜனவரி 18 ஆம் திகதியுடன் முதிர்வடையும் சர்வதேச இறையாண்மை முறிகளை (International Sovereign Bonds) தீர்ப்பதற்குத் தேவையான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனை அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment