பஹ்ரைன் நாட்டில் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதிக அளவில் பென்சன் தொகையை பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.
கடந்த 2008ம் ஆண்டு 1950 தினார்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட அந்த ஊழியர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முதலில் தனது சம்பளத்தை 2100 தினார்களாக திருத்தி உள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தனிப்பட்ட அடையாள எண்ணை பயன்படுத்தி சம்பளத்தை 3300 தினார்களாக திருத்தி உள்ளார்.
இதையடுத்து அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் அந்த ஊழியர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.
இன்சூரன்ஸ் அமைப்பின் இணையத்தளத்தில் பணியாளர்களின் தரவுகளை உள்ளிடுவது மற்றும் அவர்களின் சம்பளத்தை புதுப்பிக்கும் பொறுப்பு அந்த ஊழியரிடம் வழங்கப்பட்டிருந்ததும், இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அந்த நபர் சட்டவிரோதமாக 15,000 தினார் மதிப்புள்ள ஓய்வூதிய உதவித் தொகையைப் பெற்றதாக ஒரு காப்பீட்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 15,000 தினார் அபராதமும் விதிக்கப்பட்டதாக உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment