சதொசவில் 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி 3998 ரூபாவிற்கு : 1998 எனும் இலக்கத்திற்கு அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

சதொசவில் 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி 3998 ரூபாவிற்கு : 1998 எனும் இலக்கத்திற்கு அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம்

லங்கா சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களைப் பொதி செய்து வழங்கும் நடவடிக்கை நேற்று (15) அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதியை மக்கள் 3998 ரூபாவிற்கு சதொசவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். 

அதன்படி 10 கிலோ சுப்பர் சம்பா, 1 கிலோ வெள்ளைச் சீனி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ இடியப்ப மா, 500 கிராம் நெத்தலி, 400 கிராம் நூடில்ஸ், 400 கிராம் உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 மி.லீ. பக்கெற்), 100 கிராம் மிளகாய்த் தூள், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் STC தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 கிராம் சதொச சந்தன சவர்க்காரம், 100 மி.லீ. கை கழுவும் திரவம், 90 கிராம் சோயா மீற், சதொச TFM சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

இதன் மூலம் நுகர்வோர் 1750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பொதிகளை வீடுகளுக்குப் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார். 

ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோ கிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ கிராம் பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார். 

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ கிராம் பயறு 450 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.

பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment